Advertisement

அடுத்த பிரதமர் யார் ? பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை


லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், நேற்று இரவு வரை கூட, அந்த கூட்டணி சார்பாக ஆட்சி அமைப்பது பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. பிரதமர் மோடி, 'தே.ஜ., கூட்டணிக்கு மூன்றாவது முறை வாய்ப்பளித்ததற்கு நன்றி' என்று மட்டும், நேற்று மாலை, சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.


நன்றி தெரிவித்தனர்


பின், இரவு 9:00 மணியளவில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., கட்சி தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங், கட்சி தொண்டர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இங்கும் ஆட்சி அமைப்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டு சாதனைகளை மட்டும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்கள் வென்றுள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் தலைவர்கள், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் சந்தேக கேள்விகள் எழுந்துள்ளன.
இரு கட்சிகளின் செய்தி தொடர்பாளர்கள் மட்டும், 'நாங்கள் தே.ஜ., கூட்டணியில் தொடர்வோம்' என்று பேட்டியளித்துள்ளனர். தலைவர்கள் வாய் திறக்கவில்லை. இந்த இரு கட்சிகளுடனும், இண்டியா கூட்டணி தரப்பிலும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி தரப்படும் என்றும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்றும், தெலுங்கு தேசம் கட்சி
யினருக்கு ஆசை வார்த்தை சொல்லி இண்டியா கூட்டணி இழுக்க முயற்சிப்பதாக டில்லியில் செய்தி பரவுகிறது.
இண்டியா கூட்டணியினர் இன்று டில்லியில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு செல்கிறார்.மீண்டும் மோடி கோஷம்


மற்ற கட்சிகளின் அரசியல் நகர்வுகள் இப்படி இருக்க, பா.ஜ., கிட்டத்தட்ட நிசப்தமாக இருக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையோடு வென்றபோது, 'மீண்டும் மோடி' என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. ஆனால், இந்த முறை அவ்வாறு எந்த பேச்சும் பா.ஜ.,வில் இல்லை.
பா.ஜ.,வினர் மத்தியிலேயே இது பற்றி குழப்பம் நிலவி வருகிறது. காரணம், கூட்டணி கட்சிகளின் தயவில் பிரதமராக தொடர மோடி விரும்ப மாட்டார் என்றும், கூட்டணி ஆட்சியை வழி நடத்திச் செல்லும் அளவுக்கு பிரதமர் மோடிக்கு பொறுமை கிடையாது என்றும், அவருடைய தீவிர ஆதரவாளர்களே கூறுகின்றனர்.
கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபர் தான் பிரதமராவார் என்ற பேச்சு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இருந்தது. தற்போது பா.ஜ.,வுக்கு 272 சீட் கிடைத்திருந்தால், அந்த எம்.பி.,க்கள் கூடி, பார்லிமென்டரி பா.ஜ., கட்சியின் தலைவராக மோடியை தேர்வு செய்வர். அவர் அந்த கூட்டத்தின் தீர்மான நகலுடன் ஜனாதிபதியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தேர்தலில் அதிகமான இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சி என்ற வகையிலும் இந்த நடைமுறையை பின்பற்றலாம்.


கூட்டணி அரசு அமைப்பது என்ற முடிவுக்கு வந்தால், அக்கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதியை சந்தித்து உரிமை கேட்கலாம். அந்த கடிதங்கள் திருப்திகரமாக இருந்தால், ஆட்சி அமைத்துவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் லோக்சபாவில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி
அறிவுறுத்துவார்.

ஆசி கிடைக்காதுஇதில் சிக்கல் என்னவென்றால், நிதீஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்க முடியாது. பிரதமர் தேர்விலேயே அவர்கள் பங்கு இருக்கும். நிதீஷ், மோடிக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்தல் பின்னடைவால் மோடியின் உள்வட்ட அணி வலு குறைந்துள்ளதால் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு இருக்கும். தற்போதைய சூழலில் மோடி மீண்டும் பிரதமராக மேலிட ஆசி கிடைக்காது என்று ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி அல்லது ராஜ்நாத் சிங் பிரதமராகக் கூடும் என்ற பேச்சு டில்லி வட்டங்களில் வலுத்து வருகிறது. இது பற்றிய தெளிவு, பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் கூட்டம் கூடிய பின் தான் கிடைக்கும். அதற்கு முன், இன்று காலை 11:00 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது. ஆட்சி அமைப்பது குறித்து அதில்
விவாதிக்கப்படும்.- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்