சட்டவிரோத பண பரிமாற்றம்: சிக்கலில் ராமநாதபுரம் எம்.பி?
சென்னையில் நவாஸ்கனி எம்.பி.,க்கு சொந்தமான எஸ்.டி. குரியர் நிறுவனம் உள்பட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரம் எம்.பி.,யாக இருப்பவர், நவாஸ்கனி. வரும் லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிட உள்ளார். இந்நிலையில், இன்று காலை ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோத பணமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.நகர், திருவான்மியூர், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நவாஸ்கனி எம்.பி.,க்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி குரியர் அலுவலகத்திலும் பம்மலில் உள்ள மார்ஸ் ஓட்டல் உரிமையாளர் ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
சமீபத்தில் போதைப் பொருள் வழக்கின் கைதான ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீட்டின் அருகிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து