மனித சங்கிலி போராட்டம் பழனிசாமி 'அப்செட்'
தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் தமிழகம் முழுதும் மனித சங்கலி போராட்டம் நடந்தது.
சென்னை, ஆர்.ஏ.புரத்தில் நடந்த போராட்டத்தில், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்றார். போராட்டத்திற்கு பெரிய அளவில் ஆட்கள் வராததோடு, வந்தவர்களை முறையாக ஒருங்கிணைக்கவில்லை.
தவிர, போராட்டத்துக்கு வந்தவர்களும் கைகோர்த்து சங்கிலி போல் நிற்காமல், ஒரே இடத்தில் கூட்டமாக கூடினர். இதை பார்த்து அதிருப்தியடைந்த பழனிசாமி, அப்பகுதியின் முக்கிய நிர்வாகியான அசோகனை அழைத்து, கண்டித்தார்.
அவர், 'எவ்வளவு போராட்டத்திற்கு மத்தியில் கட்சியை வழிநடத்தி வருகிறேன். உங்களுக்கு என்னையெல்லாம் பார்த்தா விளையாட்டா தெரியுதா; எல்லாரையும் தொலைச்சி கட்டிடுவேன்' என சத்தம் போட்டார்.
இதேபோல், சென்னையில் கண்துடைப்புக்காக சொற்ப ஆட்களுடன் போராட்டம் நடந்த இடங்களிலும், அதன் பொறுப்பாளர்களை அழைத்து கடிந்து கொண்டார்.
பழனிசாமி - பன்னீர்செல்வம் பிரிவால், ஆட்களை திரட்ட முடியாமல் சிரமப்பட்டதாக கட்சியினர் கூறுகின்றனர். குறிப்பாக, வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் ஆட்கள் பற்றாக்குறையால், தொகுதியில் போராட்டம் நடத்த முடியாமல், மற்றொரு தொகுதியில் நடந்த கூட்டத்தோடு சேர்த்து நடத்தப்பட்டது.
இதே போலவே தமிழகம் முழுதும் நடந்த போராட்டங்களுக்கு பெரிய அளவில் ஆட்கள் கூடாத தகவல் வர, தேர்தல் நேரத்தில் இப்படியெல்லாம் நடப்பது சரியல்ல என கட்சி நிர்வாகிகளிடம் பழனிசாமி கொந்தளித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து