'டாட்டா பிர்லா' நடிகைக்கு மம்தா பானர்ஜி 'சீட்'
கடந்த வாரம் காங்கிரசை கழட்டிவிட்டு, மேற்கு வங்கத்தின் 42 எம்.பி., தொகுதிகளில் நிற்கும் தன் முடிவை அறிவித்தார் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. மேலும், கட்சியின் 42 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் விழாவை, கோல்கட்டாவின் பிரிகேட் மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தினார்.
அப்போது, அவர் அருகே நடந்து வந்த நடிகையைப் பார்த்தபோது, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சினிமாவிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் புகழ்பெற்ற அந்த நடிகை, ரச்சனா பானர்ஜி. இவர், 1990ல் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டவர். அதோடு, மிஸ் அழகிய சிரிப்பழகி என்ற விருதையும் பெற்றவர்.
வங்காளம், ஒடியா, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களோடு, நம் தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்கின் பூவரசன், நடிகர் பார்த்திபனின் டாட்டா பிர்லா, வாய்மையே வெல்லும் ஆகிய தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து, ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் ரச்சனா பானர்ஜி, 42.
இவர் வங்க மொழியில் வெளியாகும் 'தீதி நம்பர் 1' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார். இந்த நிகழ்ச்சியில், மார்ச் 3 அன்று ஒளிபரப்பான எபிசோடில், மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ரக்ச்னா பானர்ஜி, மம்தா பானர்ஜியோடு நெருக்கமானார். அதைத் தொடர்ந்து, இப்போது திரிணமுல் காங்கிரஸின் வேட்பாளராகவும் ஆகியுள்ளார். வங்க மக்களிடையே ரச்சனா பெற்றுள்ள புகழே, அவரது அரசியல் களத்துக்கு அடித்தளம் என்கின்றனர்திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர்.
வாசகர் கருத்து