நானும் மம்தாவும் தான் பெரிய கட்சிகள் : சொல்கிறார் சீமான்

"தி.மு.க., அ.தி.மு.க.,வும் எவ்வளவோ பெரிய கட்சிகள். ஏன் 50 பேருடன் கூட்டணி வைக்க வேண்டும். பெரிய ரவுடி என்றால் தனியாக வர வேண்டியதுதானே?" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

கரூரில் நாம் தமிழர் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து சீமான் பேசியதாவது:

தமிழ் மொழியை காக்க வேண்டும், தமிழர் உரிமை மீட்கப்பட வேண்டும். தமிழர் நிலம், வளம் இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அதைப் பற்றிக் கவலைப்படுவதற்கான அரசு இல்லை.

கேரளாவின் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுகின்றனர். இந்தியாவின் குப்பை மேடாக தமிழகம் மாறிவிட்டது. மருத்துவக் கழிவுகளை திட்டமிட்டு கேரள அரசு கொட்டுவதை அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. நச்சு ஆலைகளை அனுமதித்தது, நிலத்தை நீரை, காற்றை நஞ்சாக்கிவிட்டனர்.

இங்கு கிளீன் இந்தியா இருக்கிறது, கிரீன் இந்தியா இல்லை. 10 ஆண்டு பசுமைத் திட்டம், பல கோடி பனைத் திட்டம் எனப் போட்டு பூமியை பசுமையாக போர்த்தி நச்சு ஆலைகளை விரட்டியடிப்போம்.

ஒருமுறை வெங்காயத்துக்கு தட்டுப்பாடு வந்தபோது, எகிப்து என்ற பாலைவனத்தில் இருந்து இறக்குமதி செய்தார்கள். நான் வந்தால், 4000 ஏக்கரில் தக்காளியை விளைவித்து, ஒரு தொழிற்சாலையை போட்டு அங்கு தெர்மாகோல் போட்டு குளிர்வித்தால் போதும். தக்காளி ஊறுகாய், தக்காளி ஜாம் என போடுவோம். இந்த திட்டத்தின் மூலம், அவரவரர் வாழ்விடத்தில் அரசு வேலை உறுதி செய்யப்படும்.

இதை நாங்கள் சொல்லும்போது வேடிக்கையாக இருக்கும். என்னைக் கேட்காமல் யாரும் மரத்தை வெட்ட முடியாது என சட்டம் கொண்டு வருவேன். '100 மரம் நட்டு... ஒரு மரம் வெட்டு' என சட்டம் போடுவேன். 'கிளையை வெட்டினால் கையை வெட்டியதற்கு சமம்' என ஆறு மாதம் சிறைத்தண்டனை கொடுக்கப்படும்.

இதை நான் சொல்லும்போது சிரித்தார்கள். சீனா சட்டமே கொண்டுவந்துவிட்டது. ஒரு வேட்பாளர் 100 கோடி முதலீடு செய்து தேர்தலில் நிற்கிறார் என்றால், அவர் சேவை செய்ய வருகிறாரா.

எந்த நாட்டில் வாத்தியாருக்கு மரியாதை இருக்கிறதோ, அந்த நாடு அறிவார்ந்த சமூகமாக இருக்கும். இங்கு டாஸ்மாக்கை தேடியோ, தியேட்டரை தேடியோ ஓடுகிறார்கள்.

ஆயிரம் ரூபாயை கொடுப்பதை சாதனையாக தி.மு.க., சொல்கிறது. ஆயிரம் ரூபாயை அவர் அப்பா மோர் விற்று, நெல், மிளகாய் விற்று சிறுக சிறுக சேர்த்துக் கொடுத்த காசா... எங்கள் காசை திருப்பிக் கொடுப்பது எல்லாம் சாதனையா?

ஏமாற்றுகிறார்கள் எனத் தெரிந்தே ஏமாற்றுவது தான் நமது வழக்கம். ஆயிரம் ரூபாய் யார் அப்பா வீட்டு காசு. தமிழகத்தின் 9 லட்சம் கொடி கடனுக்கு யார் பொறுப்பு. நாம் எல்லாரும் கடன்காரர்கள். ஆயிரம் ரூபாயை கொடுப்பதற்கு பதில் அதனை சம்பாதித்துக் கொள்வதற்கு வழியை காட்டட்டும்.

தி.மு.க., அ.தி.மு.க.,வும் எவ்வளவோ பெரிய கட்சிகள். ஏன் 50 பேருடன் கூட்டணி வைக்க வேண்டும். பெரிய ரவுடி என்றால் தனியாக வர வேண்டியதுதானே. ஓட்டுக்கு ஒரு பைசா தர மாட்டோம் என தி.மு.க., சத்தியம் செய்யுமா. அப்புறம் என்ன பெரிய கட்சி.

தமிழகத்தில் ஒரே பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் தான். நானும் மேற்குவங்கத்தில் மம்தா அம்மாவும் தான் தனித்துப் போட்டியிடுகிறோம். நாங்கள் தான் பெரிய கட்சிகள். எங்கள் கட்சிக்கு வந்தால் 2 கோழிகளை வேண்டுமானால் அமுக்கலாம். கோடிகளை அமுக்க முடியாது.

இவ்வாறு சீமான் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்