மம்தாவை தள்ளிவிட்டது யார் : சந்தேகம் வலுப்பது ஏன்?
"மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்ட பின்னணியை விசாரிக்க வேண்டும்" என மேற்குவங்க மாநில பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் கீழே விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், ரத்தம் வழிந்த முகத்துடன் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகைப்படங்களை திரிணமுல் காங்கிரஸ் வெளியிட்டது.
அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதாவும் நெற்றியில் மூன்று தையலும் மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
இது குறித்து மருத்துவமனையின் இயக்குநர் மணிமோய் பந்தோபாத்யாய் கூறுகையில், "மருத்துவமனை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனக் கூறிய போதிலும், வீட்டுக்குச் செல்ல வேண்டும் என மம்தா கூறியதால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்படும்" என்றார்.
இந்நிலையில், "மம்தாவுக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என மேற்குவங்க மாநில பா.ஜ., தலைவர் சுகந்த மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மம்தா விரைவில் குணமடைய வேண்டும். அவர், எங்களின் முதல்வர். நேற்று வெளியான அறிக்கையில் யாரோ அவரை பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்பட்டது. இன்று வெளியான அறிக்கையில், யாரோ பின்னால் இருந்து தள்ளிவிட்டதைப் போல உணர்ந்ததாக மம்தா தெரிவித்துள்ளதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது. முதல்வரின் பாதுகாப்பில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் உள்துறை அமைச்சகம் கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மம்தாவை முதல்வர் மாளிகைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து