42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்: 'இண்டியா' கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 'மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, அசாம், மேகாலயாவிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்' என, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால், திரிணமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சு உடன்பாட்டை எட்டவில்லை. தொகுதிப் பங்கீட்டை பேசித் தீர்த்துக் கொள்ள உள்ளதாக காங்., தெரிவித்தது. ஆனால், இதை ஏற்க மறுத்து தனித்துப் போட்டியிட உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் தெரிவித்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடந்த பேரணியில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகப்படுத்தினார். அதில், சிட்டிங் எம்.பி.,க்கள் 16 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தமுறை வேட்பாளர் பட்டியலில் 12 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், முன்னாள் எம்.பி., மஹூவா மொய்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட்டில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மஹூவா, தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது.
அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானும் களமிறங்குகிறார். இவர், பஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இதே தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யாக காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். இவரை எதிர்த்து யூசுப் பதான் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், பர்தமான்-துர்க்காபூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் போட்டியிட உள்ளார். அசன் சால் தொகுதியில் சத்ருகன் சின்கா போட்டியிட இருக்கிறார். மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
பேரணியின் போது மம்தா பானர்ஜி பேசுகையில், "மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம். அசாம், மேகாலயாவிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் பேசி வருகிறோம். விரைவில் இதுகுறித்து தெரிவிப்போம்" என்றார்.
வாசகர் கருத்து