'டார்கெட்' வைத்து 'சீட்' சர்வகட்சி சரவணன் 'ட்ரிக்'

மதுரை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தனக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சியில் சேர்ந்தது முதல் பிரசாரம் செய்து வந்தார். அதன்படியே வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றுவிட்டார்.

டாக்டர் சரவணனுக்கு தேர்தல் புதிதல்ல. மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவி என அடுத்தடுத்து 'டார்கெட்' வைத்து அரசியலில் நுழைந்தவர். தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வைகோ பேச்சால் ஈர்க்கப்பட்டு 2015ல் ம.தி.மு.க.,வில் சேர்ந்து புறநகர் மாவட்ட செயலராக இருந்தார்.

எதிர்பார்த்த மாதிரி எதுவும் கைகூடவில்லை. இதனால் தி.மு.க.,வில் சேர்ந்தார். 2017 திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் 'செல்வாக்கால்' 'சீட்' பெற்றார். வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2019 மீண்டும் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் வெற்றியும் பெற்றார்.

கடந்த, 2021 தேர்தலில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் பா.ஜ.,வில் சேர்ந்தார். உடனே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். தோல்வி தான்.

அங்கும் அவருக்கு திருப்தி இல்லாததால் தி.மு.க.,வில் மீண்டும் சேர காய் நகர்த்தினார். அச்சமயத்தில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது பா.ஜ.,வினர் செருப்பு வீச, நகர தலைவரான சரவணன், நேராக தியாகராஜன் வீட்டிற்கு சென்று, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். பா.ஜ.,வில் இருந்தும் விலகினார்.

அடுத்து தி.மு.க.,வில் சிக்னல் கிடைக்காததால் கடந்தாண்டு அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். தன் இணைப்பை பிரமாண்டமாக மதுரையில் நடத்தினார்.

அன்று முதல் எம்.பி., தேர்தலில் 'சீட்' கேட்க காய் நகர்த்தி வந்தார். அதற்கு தகுந்தாற்போல் கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்றார்.

ஏற்கனவே மக்களிடம் இவருக்கு நல்ல அறிமுகம் உள்ளதாலும், 'சர்வகட்சி' சரவணன் என்பதாலும் மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனுக்கு சரியான போட்டியாக இருப்பார் எனக்கருதியே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வில் இங்கு 'சீட்' கேட்பதில் உட்கட்சி பூசல் இல்லாததாலும், நிர்வாகிகள் விரும்பும் நபராகவும் இருப்பதாலும் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என 'டார்கெட்' வைத்து பிரசாரம் செய்ய ஆயத்தமாகிறார் டாக்டர் சரவணன்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)