ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா : தேனியில் தினகரன் போட்டி?

பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தேனியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். சிட்டிங் எம்.பி.,யும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு ராஜ்யசபா 'சீட்' தருவதற்கு பா.ஜ., முடிவு செய்துள்ளது.

பா.ஜ.,வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க., தன் தலைமையில் கூட்டணி அமைக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது வரை பா.ம.க., தே.மு.தி.க., கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாமல் திணறுகிறது. அதேசமயம் பா.ஜ., தன் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிறது. ஏற்கனவே புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கழகத்துடன் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுகுறித்து பேசிய தினகரன், 'பா,ஜ.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம். மோடி மீண்டும் பிரதமராக வர அணிலாக உதவுவோம்' என்றார். அதேபோல பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கிறது. இதற்கிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஏற்கனவே 1999ல் போட்டியிட்டு வென்ற தினகரன், இத்தேர்தலில் தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோது அங்கு முகாமிட்டு தினகரன் களப்பணியாற்றினார். தவிர, இத்தொகுதியில் முக்குலத்தோர் அதிகம். இதனால் தேனி மாவட்டம் அவருக்கு நல்ல அறிமுகம். இதன் காரணமாகவும், பன்னீர்செல்வம் தரப்பு தனக்கு ஆதரவாக இருக்கும் என்பதாலும் தேனி தொகுதியை கேட்டுள்ளார்.

அதேசமயம் பன்னீர்செல்வத்தின் மகனும், சிட்டிங் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் வேறு தொகுதியில் போட்டியிட்டால் சிரமம் என்பதால் அவருக்கு ராஜ்யசபா 'சீட்' தர பா.ஜ., தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் தரப்பும் சம்மதம் தெரிவித்து விட்டது.

தேனி தொகுதியில் தினகரன் போட்டியிடுவதோடு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்வதாக உறுதியளித்துள்ளார். தவிர, பிரதமர் மோடி இவ்வாரத்தில் தமிழகத்தில் 3 இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதில் தினகரனும், பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்