கிடைத்தது 4... கேட்பது 9 பேர் : கம்யூ., கட்சிகளில் என்ன நிலவரம்?
தி.மு.க., கூட்டணியில் தலா இரு தொகுதிகளைப் பெற்றுள்ள கம்யூ., கட்சிகள், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
லோக்சபா தேர்தலில் இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், இ.கம்யூ., கட்சிக்கு மீண்டும் திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகளும் மா. கம்யூ., கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மா.கம்யூ.., கட்சியின் வசம் இருந்த சிட்டிங் தொகுதியான கோயம்புத்தூர் தொகுதி மீண்டும் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து, வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் இரு கம்யூ., கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இது குறித்து இ.கம்யூ., கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "நாகை தொகுதியில் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், சிட்டிங் எம்.பி., என்.செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதில், சிட்டிங் எம்.பி., செல்வராஜின் உடல்நிலை சரியில்லாததால், அவருக்கான வாய்ப்புகள் குறைவு. மற்ற இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா அல்லது சிட்டிங் எம்.பி.., செல்வராஜ் போட்டியிடுவாரா என்பதை தலைமை முடிவு செய்யும்.
திருப்பூரில் கே.சுப்பராயன், இரண்டு முறை எம்.பி.,யாக பதவி வகித்துவிட்டார். இரண்டு முறைக்கு மேல் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என கட்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சுப்பராயனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என தெரியவில்லை. திருப்பூரில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவியும் போட்டியில் இருக்கிறார்" என்றார்.
மா.கம்யூ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மதுரை லோக்சபா தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசன், களமிறங்க இருக்கிறார். திண்டுக்கல் தொகுதிக்கு பாலபாரதி, செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும்" என்றார்.
வாசகர் கருத்து