தேனியில் தங்க தமிழ்ச்செல்வன்: குருவுக்கு எதிராக சிஷ்யன்
அ.தி.மு.க., வின் கோட்டையாக திகழ்ந்த தேனி தொகுதியில் தி.மு.க., இம்முறை நேரடியாக களமிறங்கி, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை எதிர்க்க தங்கதமிழ்ச்செல்வனை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து தினகரன் 2016ல் ஓரங்கட்டப்பட்டபோது அவருடன் சென்ற 18 எம்.எல்.ஏ.,க்களில் முக்கியமானவர் தங்கதமிழ்ச்செல்வன். தினகரன் அ.ம.மு.க., கட்சி துவக்கி தங்கதமிழ்ச்செல்வனை மாநில கொள்கை பரப்பு செயலராக்கினார்.
இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த தங்கதமிழ்ச்செல்வனை, தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராக தினகரன் நிறுத்தினார். அத்தேர்தலில் அ.ம.மு.க., படுதோல்வியை சந்தித்தது.
இப்படி குரு -- சிஷ்யராக இருந்த இவர்களின் உறவு, தேர்தலுக்குப் பின் சுமூகமாக இல்லை. இச்சூழ்நிலையில் தினகரன் உதவியாளரிடம் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ பரவி, இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் தேனி தொகுதியில் குரு, தினகரனை எதிர்த்து களம் காணுகிறார் தங்கதமிழ்ச்செல்வன்.
இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது: 'களத்தில் யார் நின்றாலும், போட்டி போட்டு பார்க்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். வெற்றி, தோல்விகளை வாக்காளர்களான மக்கள்தான் முடிவு செய்வர். முதல்வர் ஸ்டாலின் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இனியும் செய்வார். நான் தினமும் மக்கள் பணியாற்றுகிறேன். ஆனால் 10 ஆண்டுகளாக எங்கே போனார் இந்த தினகரன்?' என்றார்.
வாசகர் கருத்து