ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளை: ஸ்டாலினை சாடிய தினகரன்
"தேனி தொகுதிக்கு ஜெயலலிதா இருந்தபோது எல்லாவற்றையும் செய்து கொடுத்தார். நான் வெற்றி பெற்றால் தொகுதிக்குத் தேவையான திட்டங்களை மோடியிடம் இருந்து பெற்றுத் தருவேன்" என, தேனி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
தேனியில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:
தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றேன். தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அது உண்மை எனத் தெரிந்துவிட்டது. என்னை பச்சோந்தி என பழனிசாமி சொல்கிறார். யார் பச்சோந்தி என்பது ஊருக்கே தெரியும்.
'14 வருடங்களாக தொகுதிக்கு தினகரன் வராததால் மக்களைத் தெரியுமா?' எனக் கேட்கிறார். அவருக்கு நடந்ததைப் பற்றி என்ன தெரியும். நான் ஜெயலலிதாவுக்குக் கட்டுப்பட்டவன். 2004 தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தும் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தேன்.
சிலர் செய்த சதியால் அப்பாவியாக இருந்த என்னை, 'இங்கு வரவேண்டாம்' என ஜெயலலிதா கூறிவிட்டார். அவர் என்னைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டார். இது ஏழறிவு படைத்த பழனிசாமிக்கு தெரியவில்லை. நான் ஜெயலலிதாவுக்குக் கட்டுப்பட்டவன்.
ஓர் அரசியல்வாதியாக ஜெயலலிதாவை மீறி செயல்படுவது சாதாரண விஷயமல்ல. ஆனால், சசிகலா காலில் விழுந்து பழனிசாமி பதவியை வாங்கினார். பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது, 'சசிகலாவை 100 சதவீதம் சேர்க்க மாட்டேன். சூரியனைப் பார்த்து ஏதோ குலைத்தது போல' என்றார்.
அ.தி.மு..க.,வுக்கு பச்சை துரோகம் செய்த பழனிசாமி தேனியில் வந்து பேசியிருக்கிறார். அடுத்த நாள் ஸ்டாலின் வந்து பேசினார். எந்த நேரத்தில் அவர் அப்பா, ஸ்டாலின் எனப் பெயர் வைத்தாரோ அவ்வளவு கொடுங்கோலராக இருக்கிறார்.
என் மீதுள்ள வழக்குகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். 1999ல் நான் போட்டியிட வரும்போதே வழக்கு இருந்தது. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மேல் இருந்த கோபத்தில் என் மீதும் வழக்குப் போட்டார். அதை சட்டரீதியாக எதிர்கொள்கிறேன்.
அதற்காக நான் பா.ஜ.,வில் சேர்ந்தேன் என ஸ்டாலின் பேசுகிறார். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொள்ள நான் பா.ஜ.,வுக்கு போக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி என்றால், அது கருணாநிதியின் ஆட்சி தான்.
தி.மு.க., அரசு விஞ்ஞானபூர்வ ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷன் கூறியது. ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றைக்கு கஷ்டப்படுகிறார்களே, அதற்கு காரணம் காங்கிரசின் தலைவியாக இருந்த இந்திரா காந்தி. அவர் கச்சத்தீவைக் கொடுத்தபோது கருணாநிதி அமைதியாக இருந்தார்.
சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் பேரில் உள்ளே பிடித்து போட்டுவிடுவார்கள் என கருணாநிதி பயந்து போய் இருந்தது தான் காரணம். இவர்கள் என்னை விமர்சனம் செய்கின்றனர்.
2ஜி அலைக்கற்றையில் 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஊழலை செய்தனர். அதன் விசாரணை காங்கிரஸ் ஆட்சியில் எப்படி நடந்தது என உங்களுக்கே தெரியும். அதன் ஆடியோ ரகசியங்களை அண்ணாமலை வெளியிட்டார். காற்றையே விற்ற கட்சி, மக்களுக்கு போதை மருந்துகளை விற்ற கட்சி அது.
'ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பதைப் போல ஸ்டாலின் பேசுகிறார். தேனி கூட்டத்தில் பழனிசாமியும் தி.மு.க.,வைப் பற்றிப் பேசவில்லை. ஸ்டாலினும் பழனிசாமியைப் பற்றிப் பேசவில்லை. இரண்டு பேரும் என்னை குறிவைத்து தான் பேசினார்கள்.
தேனி மக்கள் என்னை மனதில் வைத்திருப்பதால் என்னை விமர்சிக்கிறார்கள். எனக்குப் பிறகு வந்த எம்.பி.,க்களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, 'நான் வரவேண்டும்' என விருப்பப்பட்டீர்கள்.
நல்லவேளை ஸ்டாலின் பேச்சில், நான் போதை மருந்து விற்பதாக கூறவில்லை. அது தி.மு.க.,வின் டிபார்ட்மென்ட். 2019ல் பரிசுப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஒருவர் நின்றார். அவர் நல்ல மனிதராக இருந்திருந்தால் அன்றைக்கே தி.மு.க.,வுக்கு ஓடிப் போயிருக்க வேண்டும்.
பழனிசாமியிடம் இரட்டை இலை இருப்பதால் அதை மீட்டெடுக்க தேர்தலில் நிற்கிறேன். அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்கள். அது யார் பணம் எனத் தெரியும் ஆர்.கே.நகரில் ஓட்டுக்குப் பத்தாயிரம் கொடுத்தும் கூட மக்கள் எனக்குத் தான் ஓட்டு போட்டார்கள். அந்த தேர்தலில் தி.மு.க.,வை டெபாசிட் இழக்க வைத்தார்கள்.
தேனி தொகுதிக்கு ஜெயலலிதா இருந்தபோது எல்லாவற்றையும் செய்து கொடுத்தார். நான் வெற்றி பெற்றால் தொகுதிக்குத் தேவையான திட்டங்களை மோடியிடம் இருந்து பெற்றுத் தருவேன். இங்கு பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கிறார். இண்டியா கூட்டணியில் இங்கு நிற்கும் தங்க தமிழ்ச்செல்வனா பிரதமர் வேட்பாளர்?
அல்லது ஸ்டாலினா... உதயநிதியா, போதைக் கடத்தல் ஜாபர் சாதிக்கா... யார் பிரதமர் வேட்பாளர் எனக் கூறட்டும். பழனிசாமி அணியில் யார் பிரதமர் வேட்பாளர். கொடநாடு வழக்கில் மக்களுக்கு தன் மேல் சந்தேகம் இருக்கிறது என பழனிசாமிக்கு தெரியும். ஸ்டாலின் தன்னை கைது செய்துவிடக் கூடாது என நினைக்கிறார்.
அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் என யாருக்கும் எதுவும் செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து