குழப்பும் முனுசாமி தே.மு.தி.க., குற்றச்சாட்டு

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை கொண்டு வர, இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, அ.தி.மு.க., குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
இரண்டாம் கட்ட பேச்சின்போது, நான்கு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா, இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தே.மு.தி.க., கேட்டுள்ளது; அதே சமயம் ராஜ்யசபா 'சீட்' கட்டாயம் தர வேண்டுமென பிடிவாதமாக கேட்டு வருகிறது. ஆனாலும், முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிப்பதற்கு கே.பி.முனுசாமி தான் காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது.
இது குறித்து, பேச்சுவார்த்தை குழுவிலுள்ள தே.மு.தி.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
பேச்சு வார்த்தை நடந்த போது, ஏழு 'சீட்' கேட்ட நிலையில், நான்கு சீட் தருவதற்கு அ.தி.மு.க., முன்வந்துள்ளது. ஆனால், ராஜ்யசபா சீட் தர மறுக்கின்றனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கூட்டணி இருந்தபோது, ராஜ்யசபா சீட் குறித்து வாய்மொழியாகக் கூறி, கடைசியில் தே.மு.தி.க.,வுக்கு தரவில்லை. ராஜ்யசபா சீட் உறுதியளித்தவுடன், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு இறுதி வடிவம் பெறும். இதைத்தான் கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவும் சொல்லியிருக்கிறார்.
பேச்சு துவங்கியது முதல், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி, தன் இனத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். நாங்கள் கேட்ட தொகுதிகளை அந்த கட்சி கேட்பதாகக் கூறி சங்கடப்படுத்தினார். பேச்சுவார்த்தையில் முனுசாமி தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் தான் இழுபறி நீடிக்கிறது. இத்தனைக்கும் அ.தி.மு.க., பக்கம் வராமல், பா.ஜ.,வை நோக்கி பா.ம.க., செல்கிறது.
இருந்தாலும், ஓரிரு நாளில் நல்ல முடிவு வரும்.
இவ்வாறு அவர்கூறினார்.
வாசகர் கருத்து