70 சதவீத சிறுபான்மையின வாக்குகள், அ.தி.மு.க.,வுக்கு விழும்: கே.பி.முனுசாமி நம்பிக்கை
"சிறுபான்மை மக்களை ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உண்மையான ரகசிய கூட்டணி தி.மு.க.,வும்-பா.ஜ.,வுக்கும் இடையில் தான்" என, அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
நிருபர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது:
சிறுபான்மை மக்களை ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உண்மையான ரகசிய கூட்டணி தி.மு.க.,வும்-பா.ஜ.,வும் தான். ஜெயலலிதா இருந்தபோதே தவறு செய்ததால் டி.டி.வி.தினகரன் வெளியேற்றப்பட்டார்.
தேர்தல் களத்தில் மோடியா, லேடியா என ஜெயலலிதா சொன்னார். அப்படிப்பட்ட ஒருவரோடு சந்தர்ப்பவாதத்தால் கூட்டணி வைத்து நாடகம் ஆடி வருகிறார், தினகரன்.
தேர்தல் கமிஷன், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்காமல் இருப்பதில் இருந்தே ஆட்சியாளர்களின் அழுத்தம் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
தேர்தல் கமிஷன் ஆட்சியாளர்களின் அழுத்தத்தை வைத்து செயல்படுமே தவிர வாக்கு நாளான்று எந்த சிக்கலும் வராது, அப்படிச் செய்தால் அதற்கான பலன் அங்கேயே கிடைக்கும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தை மற்ற கட்சிளில் இருப்பவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் உள்ளத்திலும் மறைந்த தலைவர்கள் இருக்கின்றனர் என்று அர்த்தம். இருவரின் படத்தை யார் வெளியிட்டாலும் அ.தி.மு.க.,வுக்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
பா.ஜ., கற்பனை உலகத்தில் மிதந்து வருகிறது. 400 இடங்களில் வெல்வோம் என்ற மாயதோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். மோடி அலை என்பதை சில ஊடகங்கள் தான் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளனர். அது தேர்தல் முடிந்த பின் தெரிய வரும்.
70 சதவீத சிறுபான்மையின மக்கள் அ.தி.மு.க.,வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள பல பொய்களை சொல்லி வருகிறார். அவர் சொல்லும் கருத்துகளால் பலரின் மனம் புண்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து