'பங்காளி' பாணியில் அ.தி.மு.க., நேர்காணல்
தமிழக அரசியலில் பா.ஜ.,வின் கை ஓங்கி வருவதையடுத்து, 'நாங்களும், தி.மு.க.வும் பங்காளிகள்' என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசிய வார்த்தைகள் மிகவும் பிரபலமானவை.
அப்படிப்பட்ட பங்காளி தி.மு.க., பாணியில் அ.தி.மு.க.,வும், லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை ஒன்றாக அமர வைத்து, நேர்காணலை நடத்தி முடித்துள்ளது.
அ.தி.மு.க.,வின் பங்காளி கட்சியான தி.மு.க.,வில், லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் நடந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு அளித்தவர்களை ஒன்றாக வரவழைத்து, ஓரிருவரிடம் மட்டும் பெயருக்கு சில கேள்விகள் கேட்டுவிட்டு, யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பினர். இப்படி ஒரே நாளில் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.
அதேபோல, அ.தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.
இங்கும் பங்காளி கட்சியான தி.மு.க., பாணியில், ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு அளித்தவர்கள் அழைக்கப்பட்டனர்; அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர வைக்கப்பட்டனர். தொகுதிக்கு ஒன்றிரண்டு நபர்களிடம், அவர்கள் குறித்த விபரங்களை சட்டுபுட்டென பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.
விருப்ப மனு அளித்தவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
குறுகிய காலத்தில் நேர்காணல் கூட்டம் கூட்டப்பட்டது. எனவே, விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் ஐந்து பேரை மட்டும் தேர்வு செய்து, அழைத்து பேசினோம். யார் அந்த ஐந்து பேர் என்பதை நான் தான் தேர்வு செய்தேன். தேர்வுக்கு யாருடைய சிபாரிசும் கிடையாது. மற்றவர்கள் தங்களை அழைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம். திறமையானவர்களுக்கு அ.தி.மு.க.,வில் வாய்ப்பு அளிக்கப்படும்.
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இணைய விரும்புவோரிடம் பேச்சு நடத்தி, விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வோம். நாம் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. எந்த தொகுதி கூட்டணிக்கு போகும்; எதில் நாம் போட்டியிடுவோம் என்பது இப்போது தெரியாது.
இது ஜனநாயக கட்சி. அனைவருக்கும் உரிமை உள்ளது. அனைவருடைய உணர்வுகளையும் மதித்து, நாம் பணியாற்ற வேண்டும். அனைவருடைய அரவணைப்பையும் பெற வேண்டும். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. பிரச்னை இருந்தால், நமக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.
வரும் தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். பலர் நம்மை குறைத்து மதிப்பிடுகின்றனர். கடந்த 2019 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, 2021 சட்டசபை தேர்தலில் எவ்வளவு அதிக ஓட்டுகள் பெற்றோம் என பார்க்க வேண்டும்.
மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். எனவே, அனைவரும் வேற்றுமைகளை மறந்து, வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
வாசகர் கருத்து