அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : அரசிதழில் வெளியீடு
குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) இன்று அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள. அதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற பேச்சு நிலவியது. மத்திய உள்துறை அமித் ஷாவும், 'சி.ஏ.ஏ திருத்த சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும்' என, தெரிவித்திருந்தார்.
பார்லிமென்ட்டில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறியது. இந்த சட்டத்துக்கு மறுநாளே ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
இச்சட்டத்தின்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம்கள் அல்லாத மத சிறுபான்மையினர், இந்திய குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்கிறது. அந்தவகையில், ஹிந்து, கிறிஸ்துவர், சமணர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சி ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.
அதேநேரம், சி.ஏ.ஏ.,வை அமல்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டின. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற திருத்தத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், போராட்டத்தில் இறங்கின. புதிய விதிகள் வெளியிடப்படாததால், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாசகர் கருத்து