அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து: மோடி நிகழ்ச்சியில் மாற்றம்?
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று தமிழகம் வருவதாக தகவல் வெளியானது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா வரவுள்ளதாக கூறப்பட்டது. தேனியில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து, ரோடு ஷோ நிகழ்ச்சியும் மதுரையில் பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று, அமித் ஷாவின் தேனி, மதுரை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக பா.ஜ., தலைமைக்கு தெரிவித்துள்ளது.
அமித் ஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சரிவர செய்யாததே, அவரின் வருகை ரத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், அவரை, தேனிக்கு பதில் வேறு தொகுதியில் பிரசாரம் செய்யுமாறும், கட்சியினர் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், வரும், 9, 10, 13, 14ல் வேலுார், சென்னை, நீலகிரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில், பா.ஜ., பயண திட்டம் வகுத்துள்ளது.
தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகர், பாண்டிபஜாரில், 9ம் தேதி மோடி, 'ரோடு ஷோ' பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பாண்டிபஜார் வியாபார தளமாக இருப்பதால் அதற்கு பதில், குடியிருப்பு பகுதிகளில் மோடி பிரசாரம் செய்ய வேண்டும் என்பது, கட்சியினரின் விருப்பமாக உள்ளது.
இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பிரதமர் பிரசார தேதிகளில் மாற்றம் இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து