தமிழகத்தில் 12, 13 ல் அமித் ஷா பிரசாரம்
பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில், 19ல் பா.ஜ.; நான்கில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மீதி தொகுதிகளில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை மற்றும் கட்சி சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.
அவர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, மத்திய அமைச்சர்களை, தமிழகத்திற்கு பா.ஜ., மேலிடம் அனுப்பி வருகிறது.
அதன்படி, மத்திய அமைச்சர் அமித் ஷா, இம்மாதம், 4ம் தேதி தேனி, மதுரையிலும்; 5ம் தேதி சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
அவரின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு, அமித் ஷாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரு தினங்களாக, சென்னை, வேலுார், கோவை மேட்டுப்பாளையத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், நாளை மாலை, மதுரை விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார்.
அங்கு கூட்டணி கட்சி வேட்பாளரான தேவநாதன் யாதவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இரவு மதுரையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
அடுத்த நாள் காலை, கன்னியாகுமரி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அமித் ஷா பிரசாரம் செய்கிறார்.
மதியம், நாகை வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ்; மாலையில், தென்காசியில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
வாசகர் கருத்து