பா.ஜ.,வுடன் அ.ம.மு.க., கூட்டணி: டி.டி.வி.தினகரன்
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் தொடர்பாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டெல்லியில் வந்திருந்த பிரதிநிதிகள், என்னுடன் தொலைபேசியில் பேசினார். அவர்களிடம், பா.ஜ.,வுக்கு விக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக கூறியிருக்கிறேன்.
கடந்த 2,3 வாரங்களாக பா.ஜ.வுடன் பேசி வந்தோம். இன்றைக்கு அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டது. நேற்று டெல்லியில் இருந்து பா.ஜ., நிர்வாகிகள் சென்னை வந்திருந்தனர். அவர்களை என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை.
எங்களின் கோரிக்கைகள் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். அ.ம.மு.,கவின் தேவைகளை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறோம். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். தமிழகத்திலும் சிறப்பான வெற்றியை பா.ஜ., பெறுவதற்கு அ.ம.மு.க அனிலாக இருந்து உதவி செய்யும்.
இப்போது யார் பிரதமராக வேண்டும் என்பது தான் முக்கியம். பா.ஜ.,வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆதரவு கொடுக்கிறோம். அவர்கள் எங்கள் மீது பாராமுகம் காட்டுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அப்படி எதுவும் நடக்கவில்லை.
கடந்த ஆறு மாதங்களாக எங்களுடன் பேசி வருகிறார்கள். எந்த தொகுதி, எத்தனை தொகுதிகள் என்பது பிரச்னையில்லை. பா.ஜ.,விடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.
நாங்கள் ஒரு மாநில கட்சி. எங்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. 'எங்கள் சின்னத்தில் நில்லுங்கள்' என பா.ஜ., தரப்பில் சொல்லப்படவில்லை. அப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை. மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். அரசியலில் எத்தகைய காலகட்டம் வந்தாலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம்.
தேர்தல் தொடர்பாக, பா.ஜ., பிரநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். தமிழக மக்களின் நலனுக்காக வரும் காலகட்டங்களில் அதிக வளர்ச்சி திட்டங்களை பா.ஜ., முன்னெடுக்கும். தமிழகத்தின் நலனுக்காக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறோம்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து