சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு: மீண்டும் எம்.எல்.ஏ., ஆவாரா பொன்முடி?
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், மீண்டும் அவர் எம்.எல்.ஏ.வாக தொடரும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.,வின் 2006-2011 ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு அளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை குறைக்குமாறு பொன்முடி கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி, தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலஅவகாசத்தை 30 நாள்களுக்கு நீதிபதி நிறுத்தி வைத்தார்.
இந்த உத்தரவால், உடனடியாக அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிக்கவில்லை. இதை காலியானதாக அறிவிக்க வலியுறுத்தி, சட்டசபை செயலகத்திடம் அ.தி.மு.க., மனு கொடுத்தது. இதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் மீண்டும் அவர் எம்.எல்.ஏ.,வாக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலகம் அல்லது நீதிமன்றத்துக்கு சென்று எம்.எல்.ஏ., பதவியை பொன்முடி திரும்பப் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
"உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் வெளியான பின்பே, பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முடியுமா என்பது தெரியவரும்" என்கின்றனர், தி.மு.க., வட்டாரத்தில்.
வாசகர் கருத்து