மீண்டும் பா.ஜ., வென்றால் சுடுகாடு தான்: பழனிவேல் தியாகராஜன்
"வடமாநிலங்களில் கூட பணம்... பணம் என்று ஒற்றை இலக்கு வைத்திருக்கிற பா.ஜ.,வை அந்த மக்கள் புரிந்து கொண்டனர். மீண்டும் ஒருமுறை அவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்" என, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
எங்கெல்லாம் பணத்தை சுரண்ட முடியும் என்பதை மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகாலம் பா.ஜ., ஆட்சியை நடத்தியது. நம்மிடம் வாங்கும் பணத்தை அவர்களுக்கு ஆதரவாக உள்ள மாநிலங்களுக்கு கொடுக்கிறார்கள். அங்கு வளர்ச்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை.
ஏனென்றால், அந்த மாநிலங்களில் எல்லாம் மகளிருக்கு சம வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. உயர்சாதியினருக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை.
அனைவருக்கும் கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை உருவாக்காவிட்டால் அந்தப் பணத்தால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. இன்றைக்கு ஜனநாயகத்தை படுகொலை செய்து பிணமாகத் தான் வைத்துள்ளனர். மீண்டும் ஒருமுறை பா.ஜ., ஆட்சி ஆட்சி அமைந்தால் நமக்ககெல்லாம் சுடுகாடு தான் எதிர்காலம்.
இப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிணத்தை சுடுகாட்டுக்கு அனுப்பாமல் அதற்கு உயிரூட்டி வாழ வைக்கலாம் என்று நினைக்கக் கூடாது. காரணம், அவர்களுக்கு மக்கள் நலன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஆட்சி வரக் கூடாது. அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் எனக்கு ஒரு அச்சம் இருந்தது. படித்த, தகுதியுள்ள, சமூக ஒற்றுமையுள்ள மாநிலங்களில் மட்டும் தான் பா.ஜ.,வுக்கு ஓட்டு கிடைப்பதில்லை.
ஆனால், வடமாநிலங்களில் சுளையாக சீட்டுகளை பெறுகிறார்களே என்று நினைத்தேன். இந்தமுறை அதுவும் கிடைக்கப் போவதில்லை. பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் படி எனக்கு நம்பிக்கை வந்துள்ளது.
வடமாநிலங்களில் கூட பணம்... பணம் என்று ஒற்றை இலக்கு வைத்திருக்கிற பா.ஜ.,வை அந்த மக்கள் புரிந்து கொண்டனர். மீண்டும் ஒருமுறை அவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து