மாநில அரசின் நிதியில் ஸ்டிக்கர் ஒட்டும் மோடி : முதல்வர் ஸ்டாலின்
"அனைத்து மாவட்டங்களையும் நாம் சமமாக நினைக்கிறோம். ஆனால், மத்திய அரசு மாநிலங்களை அவ்வாறு நினைக்கிறதா?" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், மத்திய அரசு அப்படி மாநிலங்களை சமமாக நினைக்கின்றதா? மத்திய அரசு என்றால், அனைத்து மாநிலங்களையும் மதிக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். ஆனால், இன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற அரசு அப்படி செயல்படவில்லை.
மாநிலங்களையே அழிக்க நினைக்கின்றனர். மாநிலங்களை அழிப்பதன் மூலமாக நம் மொழியை, இனத்தை, பண்பாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துவதுபோல. அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் நெருங்கி வருகிறது. பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். அவரது பயணத்தைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள். இதை வெற்றுப் பயணங்களாகத் தான் பார்க்கிறார்கள். இதை சுற்றுப்பயணமாக பார்க்கவில்லை. இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்றிருக்கிறதா?
2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்தி விடுவார்கள்.
தேர்தல் வருகிறது என்று சிலிண்டர் விலையை குறைக்கின்றனர். 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கும் மேல உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கின்றனர். இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா?
சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி - இப்போது மட்டும் அடிக்கடி வருவதற்கு காரணம், தேர்தல் தான்.
'தமிழக மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்' என்று பிரதமர் கூறியிருக்கிறார். தமிழகத்துக்கு அப்படியென்ன வளர்ச்சி நிதியை கொடுத்து இருக்கிறார்? ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு நிறுத்தியதால், தமிழகத்துக்கு சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை.
வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடியை தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை, ஒப்புதலும் வழங்கவில்லை.பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 சதவீதம். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கி தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக் கொள்கிறார் என்று கூறுகிறேன்.
வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழகத்துக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார், மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும். இதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
மக்களும் அரசும், தி.மு.க.,வும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து