'பீஸ் பீஸாக ஆக்கிடுவேன்' பிரதமருக்கு அன்பரசன் எச்சரிக்கை
''தி.மு.க.,வை ஒழித்து விடுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்; இல்லையெனில், 'பீஸ் பீஸாக' ஆக்கி விடுவேன்,'' என அமைச்சர் அன்பரசன் கொந்தளித்துள்ளார்.
சென்னை, பல்லாவரத்தை அடுத்த பம்மலில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்அன்பரசன் பேசியதாவது:
இந்தியாவின் கருப்பு பணம் வெளிநாட்டில் உள்ளது. அதை மீட்டு, ஒரு நபருக்கு, 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று மோடி கூறினார்; இதுவரை, 10 பைசா கூட வரவில்லை. பண மதிப்பிழப்பு செய்து மக்களை வஞ்சித்த மத்திய அரசு, 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டு, நாளடைவில் அந்த நோட்டும் செல்லாது என்று அறிவித்த கோமாளி ஆட்சி இல்லையா இது? தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடிவருகிறார்.
எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறோம். இவ்வளவு மட்டமான பிரதமரை பார்த்ததில்லை. தி.மு.க.,வை ஒழித்து விடுவோம் என்று கூறியுள்ளார். தி.மு.க., ஒன்றும் சாதாரண இயக்கம் இல்லை. பலர் உயிர் தியாகம் செய்தும், ரத்தத்தை சிந்தியும் வளர்த்த இயக்கம். தி.மு.க.,வை ஒழிப்பேன் என்று கூறியவர்கள் தான் ஒழிந்து போனார்கள். நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்; இல்லையெனில் பீஸ் பீஸாக ஆக்கிடுவேன்.
பிரதமர் மோடி, 24 மணி நேரமும் தமிழகத்திலேயே குடியிருந்தாலும், லோக்சபா தேர்தலில் தோல்வி தான் ஏற்படும். பா.ஜ., தனித்து போட்டியிட்டாலும் அல்லது அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து போட்டியிட்டாலும், லோக்சபா தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து