ஹிந்தியில் மட்டும் பேசுவது ஏன்: பிரதமருக்கு ஸ்டாலின் கேள்வி

"தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இப்போது ஹிந்தியில் பேசுவது ஏன்?" என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

லோக்சபா தேர்தலையொட்டி, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நமோ செயலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று (மார்ச் 29) உ ரையாடினார்.

அப்போது பேசிய அவர், "எனக்கு தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம் உள்ளது. அந்த வருத்தம் என்னுடைய மனதில் ஆழமாக உள்ளது. தமிழ் மொழியின் பெருமைகளை உரத்து சொல்ல வேண்டும்" என்றார்.

மேலும், "தி.மு.க., அரசின் ஊழல், தவறான நிர்வாகம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைப் பற்றி வீடுதோறும் பிரசாரம் செய்ய வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:

தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம். கடந்த காலங்களில் தமிழகத்தில் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்த அவர், இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கியாரண்டிகளில் ஒன்றுதான், விமானங்களில் தமிழில் அறிவிப்பு.

விமானங்களில் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. எங்கும் இந்தி... எதிலும் இந்தி என மாற்றியதுதான் மோடி அரசின் சாதனை. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்