பழனிசாமியின் 9 நிபந்தனைகள் கடுப்பாகி நிராகரித்த பா.ஜ.,
பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என அ.தி.மு.க., தரப்பில் அடித்துக் கூறி வருகின்றனர். ஆனாலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் மிதுன், நேற்று முன்தினம் இரவு, மகா சிவராத்திரிக்காக ஈஷா யோகா நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சென்னை திரும்பிய வி.ஐ.பி., ஒருவரை கோவையில் சந்தித்து சில மணித் துளிகள் பேசியிருக்கிறார்.
பா.ஜ.,வோடு நெருக்கமாக இருக்கும் அந்த வி.ஐ.பி.,யிடம், இரு கட்சி கூட்டணி குறித்தும் பேசியுள்ளார் மிதுன். அப்போது, 'பா.ஜ.,வோடு எங்களுக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. கூட்டணியாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க.,வும் ஆர்வமாக உள்ளது.
'ஆனால், ஒன்பது நிபந்தனைகளை பா.ஜ., தரப்பில் ஏற்றுக் கொண்டு, அதற்கு உறுதி அளிக்கும்பட்சத்தில், கூட்டணி குறித்துப் பேசலாம்' என சொல்லி இருக்கிறார்.
'ஒருவேளை கூட்டணி அமைந்தால், பா.ஜ.,வுக்கு ஒற்றை இலக்கில் தான் சீட் தருவோம்; அதுவும் நாங்கள் கொடுக்கும் சீட்களைத்தான் பா.ஜ., தரப்பில் பெற்றுக் கொள்ள வேண்டும். பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் கூட்டணியில் இருக்கக் கூடாது.
'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா குறித்து பேசிய பேச்சுக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், பழனிசாமி தான் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பதை பா.ஜ., ஏற்க வேண்டும்' என்கிற ரீதியில் பேசியுள்ளார்.
இதை உரியவர்களிடம் தெரிவிப்பதாக அந்த வி.ஐ.பி., பிரமுகர் சொல்லி இருக்கிறார். அவரும் அதை பா.ஜ., தலைமைக்குக் கொண்டு செல்ல, இப்படியெல்லாம் நிபந்தனைகளை ஏற்றுஅ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை என, பழனிசாமி துாதர் மிதுன் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து