எந்த திட்டத்தை தடுத்தோம் என சொல்லுங்கள் : பிரதமருக்கு ஸ்டாலின் கேள்வி
"தமிழகத்துக்கு வரும் திட்டங்களை தி.மு.க., அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். அப்படி எந்த திட்டத்துக்கு நாங்கள் முட்டுக்கட்டை போட்டோம்?" என, முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1,273 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின், நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஐந்தாவது முறையாக இங்கு வந்திருக்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மனநிறைவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். இனி வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துவதால் தமிழகத்தின் தொழில் வளம் உயர்கிறது; வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக நாம் வளர்வதால் சிலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது.
மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறோம். இன்னும் பத்து மடங்கு சாதனைகளை தி.மு.க., அரசு செய்யும். 'மோடியின் உத்தரவாதம்' என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கின்றனர். நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான, ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் என்ற உத்தரவாதம் என்ன ஆனது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்ற உத்தரவாதம் எங்கே போனது?
தமிழகத்துக்கு செய்த திட்டங்களை பிரதமர் மோடி பட்டியலிடட்டும். 'இதற்கு பதில் சொல்லுங்கள் பிரதமரே' என அனைவரும் கேட்க வேண்டும். தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டங்களை தடுப்பதாக பிரதமர் சொல்கிறார். அப்படி என்ன திட்டத்தை தடுத்தோம் என பிரதமர் சொல்வாரா.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பின் போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அடுத்து, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆட்சியில் இருந்தார்கள். அவர்கள், இந்த திட்டத்தை தடுத்தார்களா?
அடுத்து ஆட்சிக்கு வந்த நாங்களும் தடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் எதையும் செய்யாமல், இப்போது வந்து பேசினால் தமிழக மக்கள் ஏமாந்துவிடுவார்களா. வாட்ஸ்ஆப் கதைகள் தான் பா.ஜ.,வின் உயிர் மூச்சு. இந்தக் கதைகள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர். வரும் தேர்தலின் மூலம், உண்மையான வளர்ச்சியை காண இந்திய மக்கள் தயாராகிவிட்டனர்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து