Advertisement

இலங்கைக்கு சென்று ஏன் பேசவில்லை: பிரதமருக்கு உதயநிதி கேள்வி

"நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் சாதனைகளை சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?" என, பிரதமர் மோடிக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இன்று (ஏப்.,1) தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களுக்காக தி.மு.க., எதையும் செய்யவில்லை.

காங்கிரசும் திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை கொள்வார்கள். கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மையால் ஏழை மீனவர்களும் மீனவப் பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ., அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடப்பதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை.

தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழகத்துக்கு வர முடியும் பிரதமரால் கஜா புயல், மிக்ஜாம் புயல் என பேரிடர்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒருமுறை கூட வராதது ஏன்?

2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது. இந்தியாவை 2020-ல் இந்தியா வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?

கருப்பு பணத்தை மீட்பேன் என்று கூறிவிட்டு மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்கள். கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?

ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த பா.ஜ., அரசை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன். வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த பா.ஜ., அரசு, 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடுத்த செங்கலை எப்போது எடுத்து வைக்கும்?

அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

கடந்த 3 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?

தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, ஆனால், சம்ஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு. நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்