Advertisement

பிரதமருக்கு ஸ்டாலினின் சான்றிதழ் அவசியமில்லை: அண்ணாமலை பதிலடி

"மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை போல, ஸ்டாலினைப் போல மொழியை வைத்து வியாபார அரசியலை செய்ய வேண்டிய அவசியம், பிரதமர் மோடிக்கு இல்லை" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டுமே தி.மு.க.,வினருக்கு வரும் தமிழ் உணர்வு, தற்போது லோக்சபா தேர்தல் நேரத்திலும் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கி தமிழகத்தைச் சுரண்டிய தி.மு.க.,வின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று ஸ்டாலின் நினைத்தால், அவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.

தமது தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்றும், தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்தும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்ததை, முதல்வர் ஸ்டாலின் கேலி செய்திருக்கிறார்.

இதனை மோடி இன்றோ, நேற்றோ கூறவில்லை. மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை போல, ஸ்டாலினைப் போல மொழியை வைத்து வியாபார அரசியலை செய்ய வேண்டிய அவசியம், பிரதமர் மோடிக்கு இல்லை.

அவர் இந்தியாவின் பிற மொழிகளைப் பேசுபவர்கள் மத்தியிலும், தமிழ் மொழி தான் தொன்மையான, இனிமையான மொழி என்று பெருமையுடன் கூறி வருகிறார்.

பல ஆண்டுகளாக, இந்தியாவின் பல மாநிலங்களில் பேசும்போதும், உலக அரங்கில் பல நாடுகளில் பேசும்போதும், பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், ஏன், ஐ.நா., சபையில் பேசும்போது கூட, 'உலகின் தொன்மையான மொழியான தமிழ், என் நாட்டின் மொழி' என்று பெருமையுடன் கூறியிருக்கிறார்.

தமிழ் மொழியின் பெருமையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளார். உலக நாடுகளின் தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து, தமிழகத்தின் கலாசாரத்தை எடுத்துரைத்திருக்கிறார்.

தமிழ் மீது பிரதமர் கொண்டுள்ள பற்றுக்கு ஸ்டாலினின் சான்றிதழ் அவசியமில்லாதது. ஆகாசவாணி என்பது, பிரசார் பாரதி நிறுவனத்தின் வானொலிப் பிரிவின் பெயர். இன்று நேற்றல்ல. சுமார் 70 ஆண்டுகளாக, ஆகாசவாணி என்பதாகத்தான் இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் மட்டுமே காட்டும் தமிழ் ஆர்வத்தில் சிறிதேனும், பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோது காட்டியிருந்தால், தமிழக மக்கள் இந்த நாடகத்தை நம்பியிருப்பார்கள்.

எனவே, தேர்தல் நேர நாடகங்களை நிறுத்திவிட்டு, உண்மையாகவே ஸ்டாலினுக்கு தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும், தேசியக் கல்விக் கொள்கையை தமிழக பள்ளிகளில் அமல்படுத்தி, அனைத்துப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும், கட்டாயமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்க முன்வரவேண்டும்.

மீனவர்களின் பாதுகாப்பு குறித்துக் கவலைப்பட, இது தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியின் அரசு அல்ல. தி.மு.க., -காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 80 மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் உடனுக்குடன் மீட்கப்படுகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கும், மீனவர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

கருப்புப்பணம் மீட்டிருப்பது குறித்து பொதுமக்கள் நன்கு அறிவார்கள். அது ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றால், தனது கட்சியினரிடமும் தனது இண்டி கூட்டணிக் கட்சியினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஊழல் ஒழிப்பு குறித்து ஸ்டாலின் கேள்வி கேட்பதை, தமிழக மக்களின் வார இறுதி நகைச்சுவைக்காக விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்