மதுரை தொகுதியில் 'தி.மு.க., பிளான் 2' :இளைஞரணி விடாப்பிடி
மதுரை தொகுதியில் இம்முறை தி.மு.க.,வே போட்டியிட வேண்டும். மீண்டும் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும் என, உள்ளூர் தி.மு.க.,வினர் கட்சித் தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மேலும், மதுரை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆதரவாளர்கள் யாருக்கு சீட் கொடுத்தாலும், ஒருதரப்பு 'அப்செட்'டாகும். எனவே, கூட்டணிக்கு தொகுதியை தள்ளிவிடுவது தான் நல்ல 'சாய்ஸ்' என கட்சித் தலைமை முடிவாக உள்ளது.
கமலின் ம.நீ.ம.,வும் மதுரை, கோவை தொகுதிகள் 'லிஸ்ட்'டை தி.மு.க.,விடம் கொடுத்துள்ளது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதியிடம், 'இளைஞரணி கோட்டா'வில் மதுரை தொகுதியை கேட்டு அதன் நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.
இது குறித்து, இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது:
சிட்டிங் எம்.பி., வெங்கடேசன் மீது மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். இது, தி.மு.க, தலைமைக்கும் தெரியும். ஒருவேளை, 'மதுரையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது' என தி.மு.க., முடிவு எடுத்தால், அமைச்சர் உதயநிதி வசமுள்ள இளைஞரணி கோட்டாவிற்கு தொகுதியை மாற்றும் 'பிளான் 2' தயாராக உள்ளது.
அமைச்சர் உதயநிதி முடிவெடுத்துவிட்டால் அதை கம்யூனிஸ்டோ, ம.நீ.ம.,வோ மாற்றுவது கஷ்டம். அதனால் தான் இளைஞரணி மூலம் மதுரையை மீண்டும் தி.மு.க.,விற்கு கேட்டு போர்க்கொடி துாக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, மதுரை தொகுதியை கேட்டு இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் பலர், கட்சித் தலைமையிடம் விருப்ப மனுக்கள் அளித்து வருகின்றனர். இது, மா.கம்யூ.,வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து