அனுமதியின்றி தார் 'பிளான்ட்' 3 கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பு
அரசு அனுமதி பெறாமல், தார் பிளான்ட் அமைக்கும் தி.மு.க., நிர்வாகியின் அடாவடியால், மூன்று கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் மும்பை நாகராஜ். பொன்னம்பட்டி தி.மு.க., நகர செயலர். இவரது மகள் சரண்யா, பொன்னம்பட்டி டவுன் பஞ்., சேர்மனாக உள்ளார்.
மதுரை - திருச்சி பைபாசில் உள்ள, வளநாடு கைகாட்டி அருகே சொரியம்பட்டியில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில், நாகராஜ் தார் பிளான்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என புகார் தெரிவித்து, மளுகப்பட்டி, அக்குலம்பட்டி, சொரியம்பட்டி கிராம மக்கள், தார் பிளான்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தார் பிளான்ட் அமைக்க அரசின் அனுமதி பெறப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நாகராஜிடம் கிராம மக்கள் கேட்டபோது, 'உங்களால் முடிந்ததைப் பாருங்கள்' என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் மகேஷின் தீவிர ஆதரவாளரான நாகராஜை எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த, கரூர் தொகுதியில் உள்ள, மூன்று கிராம மக்களும், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும், இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தேர்தலுக்குப் பின் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து