மோடி திராவிடர், இ.பி.எஸ்., ஆரியர்!

இது, தேர்தல் மகோத்ஸவ காலம். மகோத்ஸவம் என்றாலே, மகாத்மியங்களும், உபன்யாஸங்களும், நாம சங்கீர்த்தனங்களும், பஜனைகளும், கச்சேரிகளும் நடைபெறுவது இயல்பு தான். ஆரிய, திராவிட உபன்யாசங்களும், தமிழ் தேசிய கச்சேரிகளும், ஆசீவக பஜனைகளும், கன ஜோராக நிகழ்ந்து வருகின்றன.

இவற்றை எல்லாம் மீறி, முன்னாள் மத்திய அமைச்சர், 'ஸ்பெக்ட்ரம்' ஆ.ராசா, சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில், அமைச்சர் பாண்டியராஜனை நோக்கி, 'யார் ஹிந்து; எது திராவிடம்?' என்று கேட்டு, ஒரு மறக்க முடியாத கதாகாலஷேபத்தை செய்தார். அதைக்கேட்ட எனக்கு, பசியும், துாக்கமும் பறந்து போய் விட்டன. உடனே, இந்த மகோத்ஸவத்தில், நாமும் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

ஆனால், கேள்வி கேட்பதற்கு, எனக்கு பார்லிமென்ட்டோ, பாண்டியராஜனோ சிக்கவில்லை. நீங்கள் தான் வசமாக மாட்டிக் கொண்டீர்கள். உங்கள் வாயிலாக கேட்கிறேன், “ஆ.ராசா அவர்களே, என் தாத்தாவை ஏன் படிக்கவிடவில்லை என்று, பிதுரார்ஜிதமாக கேட்டீர்களே. படிக்க விடாதது ஆரியர் என்ற பொருள், அதில் அடக்கம் தானே?”

ஆரியர்கள் தங்கள் சமூகத்தை, நான்கு வர்ணங்களாக பிரித்தார்கள். அதாவது, ஆரிய பிராமணர், ஆரிய ஷத்திரியர், ஆரிய வைசியர், ஆரிய சூத்திரர் என்று பிரித்தார்கள். உங்களின் தாத்தா, எப்படி சூத்திரராகி இருக்க முடியும்? ஆரியராக இருந்தால் தானே, பின் சூத்திரராக முடியும்! இவ்விஷயம் உண்மை என்றால், உங்களது தாத்தாவும் ஆரியராகிறார். இல்லை என்றால், அவரைப் படிக்கவிடவில்லை என்பது, பொய்யாகி விடும். செவிமடுத்து, தேவரீர் விளக்கம் கூறவேண்டும்.

ஆரியர்களின் முதல் புராணம் மச்சபுராணம். அதில், உலகம் ஒரு பேரழிவை சந்தித்த பிறகு, உருவான முதல் மனிதனுக்கு பெயர் சுயம்புவ மனு. அவன் பாண்டிய மன்னன் என்று, மச்சபுராணம் பேசுகிறது. போதாக்குறைக்கு, 'திராவிட ஈஷ்வர்' என்ற, சொல்லாடலும் வருகிறது. தமிழில் இடம் பெறாத, 'திராவிடம்' சமஸ்கிருதத்தில் இடம் பெற்றதன் மாயம் என்ன?

போகட்டும். பொ.கா.மு., (பொது காலத்திற்கு முன்) 865ல், அதாவது, 2,886 ஆண்டுகளுக்கு முன் பொறிக்கப்பட்ட வேள்விக்குடி செப்பேட்டை அறிவீரோ? அதில், பாண்டியன் நெடுஞ்செழியன், தன் குல முன்னோர் என, புரூரவஸ் என்ற, ஆரியனை கைகாட்டுகிறான். புரூரவஸ் ரிக் வேதத்தில் இடம் பெறுபவன். மகாபாரதத்தின் பாண்டவர்களும், கவுரவர்களும் வந்த சந்திர வம்சத்தின் முதல் அரசன்.

அதுமட்டுமா, புரூரவஸ் தான், மீன் சின்னத்தை வழங்கினான் என்றும் பாண்டியன், நெடுஞ்செழியன் எழுதி இருக்கிறான். சம்ஸ்கிருத புராணங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள் என்று கூறுவதில், 80 சதவீத ஊர்கள், தமிழ் நாட்டில் இருப்பது எப்படி? மச்சாவதாரம் நிகழ்ந்தது, திருநெல்வேலி ஜில்லா; முதல் மனு தோன்றியதும், திருநெல்வேலி. கஜேந்திர மோக்ஷம் நிகழ்ந்ததும் திருநெல்வேலியில் உள்ள அத்தாளநல்லுார்.

ஆரியர்கள் மாய்ந்து மாய்ந்து, தமிழகத்தை தலையில் வைத்துக் கொண்டாட என்ன காரணம்? அப்போது தேர்தலும் இல்லை, 'மன் கி பாத்'தும் இல்லை. தமிழர்களின் முழுமுதற் கடவுளான சிவன் ஏன், இமயத்தில் குடியிருக்க வேண்டும்? பக்தியிலும் தேசியம் இருக்க வேண்டும் என்ற, மகோன்னதமான சிந்தனை தானோ?

இறுதியாக ஒரு செய்தி. 'கருப்பு திராவிட நிறம், வெளுப்பு ஆரிய நிறம்' என்ற கோஷம், வெகு நாட்களாகக் கேட்கிறது. ஆரிய கடவுள்கள் அனைவரும் கருப்பு. ராமன் கருப்பு, கண்ணன் கருப்பு. ஏன் மஹாவிஷ்ணுவும் கருப்பு தான், 'மேக வர்ணம் ஷுபாங்கம்' அதாவது, மழை மேகங்களை போல, கருத்தவன் என்று வர்ணிக்கிறது, விஷ்ணு சஹஸ்ரநாமம்.

தமிழ் கடவுள் முருகன் சிவப்பு. 'ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி' என்கிறது, திருமுருகாற்றுப்படை. சிவன் என்ற பெயரே சிவந்தவன் என்று பொருள் படும். இதென்ன குழப்பம்?நான் ஒரு அருமையான யோசனை சொல்கிறேன்!

எடப்பாடியார் ராமனை போல கருப்பாக இருக்கிறார். எனவே, அவர் ஆரியர் என்று அறிக்கை விட்டால், தேர்தல் களம் எகிறும். மோடி முருகனை போல சிவப்பாக இருக்கிறார். எனவே அவர், திராவிடர் என்று கொளுத்திப் போட்டால், என்றாவது ஒருநாள் கூட்டணிக்கு உதவும்.

பா.பிரபாகரன்
எழுத்தாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)