திண்டுக்கல்லுக்கு தாவும் எம்.பி., ஜோதிமணி
கடந்த, 2019ல் நடந்த எம்.பி., தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் கரூர் தொகுதியில் காங்., சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஜோதிமணி. பல காரணங்களால் ஜோதிமணி, வரும் எம்.பி., தேர்தலில் திண்டுக்கல் தொகுதிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து, காங்., கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
கரூர் தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என, தி.மு.க., நிர்வாகிகள் கடந்த, ஓராண்டுக்கும் மேலாக கூறி வருகின்றனர். அப்படியே ஒதுக்கினாலும், ஜோதிமணிக்கு சீட் வழங்கக் கூடாது என, முன்னாள் மாவட்ட காங்., தலைவர் பாங்க் சுப்பிரமணியம் கோஷ்டியினர் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முறைத்து கொண்டதால், ஜோதிமணிக்கு தி.மு.க., நிர்வாகிகள் வேலை பார்க்க மாட்டார்கள். அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடும் பட்சத்தில், ஜோதிமணியின் வெற்றி கேள்விக்குறியாகி விடும்.
இதனால், ஜோதிமணியின் பார்வை திண்டுக்கல் தொகுதி மீது திரும்பியுள்ளது. அங்கு, பெரியசாமி, சக்கரபாணி என இரு அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும், சிட்டிங் எம்.பி., வேலுசாமியை வளர்த்துவிட விரும்பவில்லை. அதனால், திண்டுக்கல்லுக்குப் போனால், அவர்கள் இருவரும் தனக்கு உதவிடுவர் என நம்புகிறார்.
கடந்த தேர்தலைப்போல் இந்த முறையும், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பிரச்னை இல்லாமல் வெற்றி பெறலாம் என, ஜோதிமணி கருதுகிறார். இதனால், தி.மு.க., கூட்டணியில் காங்.,குக்கு தொகுதியை ஒதுக்கிக் கொடுக்க வலியுறுத்துமாறு டில்லி தலைவர்கள் வாயிலாக காய் நகர்த்தி வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து