இவர்கள் மட்டும் தான் எம்.பி., ஆக வேண்டுமா: கனிமொழியை சாடிய தமிழிசை
"திகார் ஜெயிலில் இருந்து வந்து கனிமொழி தேர்தலில் போட்டியிடும் போது, ராஜ்பவனில் இருந்து வந்த நான் போட்டியிடக்கூடாதா. மக்கள் மீது அக்கறை இருப்பதால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன்" என பா.ஜ., தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் பா.ஜ., அறிவுசார் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பின் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
25 ஆண்டுகளாக பொது வாழ்விலும் 4 ஆண்டுகள் கவர்னராகவும் இருந்திருப்பது தான் என் அரசியல் அனுபவம். தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பேசும் அனைவரும் அவர்களின் சாதனையைப் பற்றி பேசுவது கிடையாது.
நான் ஏன் கவர்னராக இருந்து இங்கு வந்திருக்கிறேன் என மட்டுமே பேசுகின்றனர். நான் கவர்னராக இருந்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நீங்கள் அல்ல.
மக்களுக்காக போட்டியிடுவதும், எம்.பி., ஆவதும் இவர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது என்பது போல பேசி வருகின்றனர். 'ராஜ்பவனிலேயே இருந்திருக்க வேண்டியது தானே?' என்கிறார் கனிமொழி.
திகார் ஜெயிலில் இருந்து வந்து கனிமொழி தேர்தலில் போட்டியிடும் போது, ராஜ்பவனில் இருந்து வந்த நான் போட்டியிடக்கூடாதா. மக்கள் மீது அக்கறை இருப்பதால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன்.
வேட்பாளர்கள் இல்லாததால் நான் போட்டியிடுவதாக கூறுவதை கடுமையாக எதிர்க்கிறேன். கனிமொழி ஏன் துாத்துக்குடியில் போட்டியிடுகிறார். அவர் கட்சியில் வேறு நபர்களே கிடையாதா?
மத்திய சென்னையில் தயாநிதி போட்டியிடுகிறார். அவர் கட்சியில் வேறு தொண்டர்களே கிடையாதா. தி.மு.க., எம்.பி.,க்களின் சாதனைகளை கூறி ஓட்டு கேளுங்கள். அதை சொல்லி கேட்க முடியாது. சாதனையை சொல்லி கேட்க எதுவும் கிடையாது. உங்களுக்கு ஓட்டு போட்டதால் வேதனை மட்டும் உள்ளது.
மத்திய அமைச்சர்கள் தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்து பிரசாரத்திற்கு வருகின்றனர். தென் சென்னை மக்களை பார்க்க வேண்டும் என்று பிரதமர் வருவது மிகப் பெரிய பாக்கியம். மோடியின் வருகை வெற்றியை ஏற்படுத்தி தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து