பழனிசாமியை அடைகாக்கும் பா.ஜ., பன்னீர் தரப்பில் 'அட்டாக்' ஆரம்பம்
பா.ஜ.,வுடன் தான் கூட்டணி என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், அக்கட்சி பாராமுகமாக இருப்பது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து, ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
கட்சி, சின்னம் எதுவும் இல்லாத நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தனியாக அதை சாதிக்க முடியாது என்பதால், அ.ம.மு.க.,வுடன் கைகோர்த்துள்ளார்.
இருவரும் பா.ஜ., தலைமையில் அணி சேர்ந்து, தென் மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க திட்டமிட்டார். எனவே, பா.ஜ.,வுடன் தான் கூட்டணி என்றும், மூன்றாவது முறை பிரதமராக மோடி வர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றும், பன்னீர்செல்வம் அறிவித்தார்.
பா.ஜ., தரப்பில், இன்னமும் பன்னீர்செல்வம், தினகரனிடம் பேச்சு நடத்தவில்லை. த.மா.கா., புதிய நீதிக் கட்சிகளுடன் மட்டும் பேசிய பா.ஜ., பன்னீர்செல்வம், தினகரன் பக்கம் திரும்பாதது, அவர்களின் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலர் மருது அழகுராஜ், தன் சொந்த கருத்து என்ற தலைப்பில், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
பழனிசாமி போன்ற தலைமை பண்பற்றவரிடம், அ.தி.மு.க., அகப்பட்டால் தான், கோட்டையில் தாங்கள் தொடர்ந்து கோலோச்ச முடியும் என, தி.மு.க., நினைக்கிறது. அதேபோல, அ.தி.மு.க.,வுக்கு பழனிசாமி தலைமை வகித்தால் தான், கொஞ்சம் கொஞ்சமாக, இலைக் கட்சியை பூ கட்சியாக்கி விடலாம் என, காவிக்கட்சி கணக்கு போடுகிறது.
இதனால் தான் பழனிசாமியையும், அவரது சகாக்களையும், மத்திய பா.ஜ., அரசும், மாநில தி.மு.க., ஆட்சியும் போட்டி போட்டு அடைகாக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து