சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.
பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார்.
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். 'இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை' என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, 'முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது' என்றார்.
வாசகர் கருத்து