விருப்ப மனு தேதி நீட்டிப்பு அ.தி.மு.க., அலுவலகம் 'வெறிச்'

அ.தி.மு.க., நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று, விருப்ப மனு கொடுப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று கட்சி தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்கும் பணி, கடந்த மாதம், 21ம் தேதி துவங்கியது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
பொதுத் தொகுதிக்கு 20,000; தனித் தொகுதிக்கு 15,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, கட்சியினர் விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர். தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நேற்று முன்தினம் விண்ணப்பம் பெற, பூர்த்தி செய்து வழங்க, கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஏராளமானோர் கட்சி தலைமை அலுவலகம் வந்து விருப்ப மனு அளித்தனர்.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று, விருப்ப மனு வழங்குவதற்கான தேதி, வரும் 6ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, நேற்று முன்தினம் கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், நேற்று கட்சி தலைமை அலுவலகத்திற்கு, விருப்ப மனு வாங்க, கட்சியினர் அதிகம் வராததால், கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.ஓரிருவர் மட்டும் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர். நேற்று சனிக்கிழமை என்பதால், கட்சியினர் விருப்ப மனு வாங்க, ஆர்வம் காட்டவில்லை என, கட்சி தலைமை அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து