மீண்டும் கமலுடன் மோதல் தயாராகிறார் வானதி சீனிவாசன்
கோவையில் கமல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி களமிறக்கப்படலாம் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.தி.மு.க., கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கு, கோவை தொகுதி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட தி.மு.க., வலியுறுத்துகிறது. ஆனால், 'டார்ச் லைட்' சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கமல் பிடிவாதமாக இருப்பதால், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கோவையில் கமல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில், அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி நிறுத்தப்படலாம் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
முதல் முறையாக, 2021 சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் களம் கண்ட கமலை, வானதி தோற்கடித்தார். கோவையில் இழந்த வெற்றியை, மீண்டும் கோவையில் பெற கமல் விரும்புவதாக கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமல் இருந்த வானதி, 'கோவையில் கமல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிட தயார். மீண்டும் அவரை தோற்கடிப்பேன்' என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த 1996ல் இருந்து கோவையில் கணிசமான ஓட்டுகளைப் பெற்று வரும் பா.ஜ., 1998ல் அ.தி.மு.க., கூட்டணியிலும், 1999ல் தி.மு.க., கூட்டணியிலும் கோவையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரிக்கு அடுத்து பா.ஜ.,வுக்கு செல்வாக்குள்ள கோவை தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து