தேர்தல் களமும் சில யதார்த்தங்களும்!
இப்போதைய தேர்தல் களம் என்பது மிக பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நம்பி இருப்பதாகத் தெரியவில்லை. இப்படிச் சொல்லும் போது நமக்குள் ஓர் ஆச்சரியம் எழலாம். ஆனால், உண்மை நிலவரம் அதுதான். பிரபலமான தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர். அந்தப் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்கள் சேகரிக்கப்படுகின்றனர்.
மக்களே உவந்து, எந்த ஒரு கூட்டத்திற்கும் செல்வதாகத் தெரியவில்லை. கூட்டத்தில் பேசுகிற தலைவர் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லும் போது பொதுமக்களின் முகத்தில் எந்தவிதமான பாவங்களும் தெரியவில்லை என்பதைக் கண்கூடாகக் காண முடியும். வெயிலில் காயும் அந்தப் பொதுமக்கள்தான் பாவம்.
இரண்டாம் கட்டத் தலைவர்களோ, நட்சத்திரப் பேச்சாளர்களோ பேசக்கூடிய கூட்டங்களுக்குகூட அதிகமாகக் கூட்டம் வருவதில்லை. இதை நன்றாக உணர்ந்த ஒரே கட்சி என்றால் அது பா.ஜ.,தான். எனவேதான் அவர்கள் பிரசார யுக்தியை மாற்றி இருக்கின்றனர். 'ரோடு ஷோ' என்பது எல்லாராலும் இன்று கவனிக்கப்படுகிறது.
நேரடியாகத் தங்களுடைய தலைவரை மிக அருகில் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தோடு ரோடு ஷோவுக்கு கூட்டம் கூடுகிறது. 'பர்சனல் டச்' என்று சொல்வோமே, அந்த உணர்வு இதுபோன்ற ரோடு ஷோ வாயிலாக ஏற்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆரம்பித்த நடைபயணம் தான் பல அரசியல்வாதிகள் நடைபயணம் மேற்கொள்ளத் துாண்டுதலாக இருந்தது. பா.ஜ., தலைவர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை மிகப் பெரிய பயனைக் அக்கட்சிக்கு கொடுத்தது. ராகுலின் யாத்திரையும் தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்தில் பயன் அளித்ததாகச் சொல்வோர் உண்டு.
பாதயாத்திரை பயன்
தமிழகத்தில், சமீப காலத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண்; என் மக்கள்' பாத யாத்திரை தமிழக வாக்காளர்களிடம் பா.ஜ.,வுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் கூடுவதற்கு இந்த யாத்திரை ஒரு காரணமாக அமையும்.
ஒவ்வொரு ஊரிலும் பாதயாத்திரை செல்லும்போது அனைத்து தரப்பு மக்களிடமும் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. தலைவரின் முகமும் எல்லாரிடமும் பிரபலமாகிறது. எனவே, பெரிய பொதுக்கூட்டங்களை விட இதுபோன்ற 'ரோடு ஷோ,' பாதயாத்திரை போன்றவை பயன்தரக் கூடியவையாகத்தான் இருக்கும்.
அமெரிக்க தேர்தல்களில் 'டிவி' விவாதங்கள் பெரும் வரவேற்பைப் பெறுபவை. விவாதங்களில் பங்கேற்ற தலைவர்களின் வாக்குறுதிகளையும் சொல்லாற்றலை கண்டு பிரமிக்கும் மக்கள் ஓட்டுகள் செலுத்தி திறமையானவர்களைத் தேர்வு செய்கின்றனர். நம் நாட்டில் அதுபோன்ற எந்த ஒரு நிகழ்வும் இதுவரை பெரிய அளவில் நடந்தது இல்லை.
முரண்பட்ட கூட்டணி
அறிவுப்பூர்வமான விவாதங்களை விட, மலிவான அரசியல் வாக்குறுதிகள்தான் இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கின்றன. சித்தாந்தம், கொள்கை போன்றவை ஒரு கட்சிக்கு இருக்க வேண்டியதுதான். ஆனால், எந்த ஒரு வேட்பாளரும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஓட்டுக் கேட்பது இல்லை. அதற்கு முக்கிய காரணம், கூட்டணி அரசியல்தான். முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன.
பல ஆண்டுகளாகவே இந்திய அரசியலில் இது சகஜமாகி விட்டது. ஆகவே, 'டிவி' விவாதங்கள் இங்கே எடுபடாது. ஆனால், அதே சமயத்தில் இணையதளம் மூலம் செய்யப்படும் பிரசாரங்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது.
தேர்தல் அறிக்கைகளைப் படித்து, அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து யாரும் ஓட்டுச்சாவடிக்குச் செல்வதில்லை. இங்கே எல்லாமே சடங்குதான்.
பிரதமரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர் தான். ஆனால், தனிப்பட்ட முறையில் தாக்குதலோ அல்லது தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ நாகரிகம் அற்ற செயல் என்பதை எல்லாக் கட்சிகளுமே உணர வேண்டும்.
போதிய இடைெவளி
சில நேரங்களில் சில வார்த்தைகளே பேசு பொருளாகி, அது அகில இந்திய அளவில் வெற்றிக்குக் கூட வழி வகுத்து விடும் என்பதை உணர்ந்து கட்சிகள் செயல்பட வேண்டும். வெங்காயத்தை வைத்து டில்லி அரசியல் ஒரு சமயத்தில் சுழன்றதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோலத்தான் இன்று குடும்பம் இல்லாதவர், சனாதனம் போன்ற வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இந்த தேர்தல் முடிந்த பின்பு தான் தெரியும்.
இந்த முறை வயதானவர்களின் வீடு தேடி ஓட்டுப் பெட்டியுடன் வந்து வயதானவர்கள் ஓட்டளிக்க வழிவகை செய்துள்ளது தேர்தல் கமிஷன். இதை பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் வேறு சில ஏற்பாடுகளையும் தேர்தல் நாளில் தேர்தல் கமிஷன் செய்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு வரும்போது அவர்களுக்குத் தனி வரிசை வழங்கப்பட்டு வருகிறது. வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்கக்கூடிய அறை கொஞ்சம் பெரிய அறையாக இருந்தால் நல்லது. அவர்கள் உள்ளேயும், வெளியேயும்; வருவதற்கும், செல்வதற்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். வயதானவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய ஆவணங்களை மிகக் குறுகிய நேரத்தில் சோதனை செய்து, உடனடியாக அவர்கள் ஓட்டளிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வயதானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடிக்கு செல்லும் அறையின் முன்பாக இரு புறத்திலும் கை பிடித்துச் செல்வதற்கு இரும்பு அமைப்புகள் இருக்கின்றன. தரைதளம் என்றாலும் அறைக்குள் சக்கர நாற்காலிகள் செல்கிற மாதிரி, சாய்வான தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிங்கப்பூர் தேர்தல் இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. அதுபோன்ற அமைப்புகளை இங்கேயும் நாம் கொண்டு வரலாம்.
-கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,ஆசிரியர்,கலைமகள் இதழ்
வாசகர் கருத்து