தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க., இருக்காது: அண்ணாமலை உறுதி
"அ.தி.மு.க., தொண்டர்களும் தேர்தலுக்குப் பிறகு அ.ம.மு.க.,வுடன் இணையப் போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவர் யார் என்று அவர்களுக்குத் தெரியும்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தேனியில் அ.ம.மு.க., வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தின் அரசியல் மாறிக் கொண்டிருக்கிறது. 2026ல் நடக்கப் போகும் ஆட்சி மாற்றத்துக்கு 2024 பார்லிமென்ட் தேர்தல் துவக்கமாக அமையும். 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம். விளம்பரமே தேவையில்லாத ஓர் ஆட்சியாக இருந்தது.
ஆனால், 33 மாத காலம் ஆட்சியில் இருந்துவிட்டு விளம்பரங்களாக போட்டு, 'நான் வேலை செய்திருக்கிறேன், வாக்களியுங்கள்' என்கிறார். மகளிர், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை மையமாக வைத்து எப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்க முடியும் என மோடி காட்டியிருக்கிறோம்.
2014ல் பா.ஜ.,வுக்கு 283 எம்.பி.க்கள் கிடைத்தார்கள். 2019ல் 303 பேர் கிடைத்தார்கள். '2024ல் 400 பேரை பார்லிமென்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என மோடி கேட்கிறார். இந்த நாட்டை வலுப்படுத்த 400 பேர் தேவைப்படுகிறார்கள்.
இந்த தேர்தலில் வெறும் 21 இடங்களில் தி.மு.க., நிற்கிறது. ஆனால், 'இந்தியாவை காப்பாற்ற வேண்டும்' என்கிறார். தமிழகத்தை ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்த தொண்டரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்.
அவரே வரவேண்டும் என விரும்பியதற்கு காரணம், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை காட்ட வேண்டும் என்பதால் தான். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும் என நிற்கிறார்கள். ஆனால், இரண்டு ஒரே கட்சி தான்.
தொண்டர்கள் வேறு வேறாக இருக்கிறார்கள். ஆனால், தலைவர்கள் ஒன்று தான். இந்த தேர்தலில் தினகரனை தோற்கடிக்க இரண்டு வேட்பாளர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், தொண்டர்கள் ஒன்று சேரவில்லை. அ.தி.மு.க., ஓட்டும் தினகரனுக்கு வந்து சேரும்.
அ.தி.மு.க., தொண்டர்களும் தேர்தலுக்குப் பிறகு அ.ம.மு.க.,வுடன் இணையப் போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவர் யார் என்று அவர்களுக்குத் தெரியும். இன்று தேர்தல் களத்தில் நின்று கொண்டு திட்டிக் கொள்வதைப் போல இரு கட்சிகளும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.
தேனியில் பிரசாரம் செய்த வந்த ஸ்டாலினும் பழனிசாமியும் தினகரனைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். தேனி மக்களுக்கு முல்லை பெரியாறு நீர் என்பது மிக முக்கியமான நீர் ஆதாரம்.
2006ல் 146 அடி உயர்த்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அணையைக் கட்டி முடித்த பிறகு 156 அடியாக உயர்த்தலாம் என்றனர். ஆனால், 133 அடியாக கேரள அரசு குறைத்தபோது தி.மு.க., எதையும் பேசவில்லை. காங்கிரஸ் அரசுடன் இணைந்து பெரியார் புலிகள் சரணாலத்தில் ஓர் அணையைக் கட்ட முடிவு செய்தனர்.
'இதற்கு எதிராக ஆர்பாட்டம் செய்யலாம்' என கருணாநிதி நினைத்தபோது, '2ஜி வழக்கில் உள்ளே போட்டுவிடுவோம்' என ஜெய்ராம் ரமேஷ் மிரட்டினார். அதன்பிறகு அப்படியே அடங்கிவிட்டார். இந்தப் பகுதி விவசாயிகளை வஞ்சித்து கபட நாடகம் ஆடினர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை காட்டு மிராண்டி விளையாட்டு எனக் கூறி தடை செய்தனர். 'ஜல்லிக்கட்டு மாட்டை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம்' என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் ஆகிவிட்டன. எதுவும் தரவில்லை.
தேர்தல் நேரத்தில் 500 ரூபாயை தூக்கிக் கொண்டு வருவார்கள். 'கஞ்சா விற்று வந்த பணம் என்பதால் வேண்டாம்' என நீங்கள் கூற வேண்டும். மீண்டும் காங்கிரஸ் அரசு வந்தால் முல்லைப்பெரியாறில் வரக் கூடிய மீதி தண்ணீரையும் நிறுத்திவிடுவார்கள்.
தினகரன் 16 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு வந்துள்ளதாக பழனிசாமி பேசியிருக்கிறார். 16 ஆண்டுகள் கழித்து வேட்பாளராக வர வேண்டிய அவசியம் என்ன. சில நேரங்களில் ராமன் காட்டைவிட்டு போய்த் தான் ஆக வேண்டும். அதே ராமன் திரும்ப வந்து தான் ஆக வேண்டும். வனவாசத்தை எல்லாம் முடித்துவிட்டு களத்தில் தினகரன் நின்று கொண்டிருக்கிறார்.
'அவர் வெல்லக் கூடாது' என தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மறைமுக கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் அதை ஏற்க மாட்டார்கள். 2024 தேர்தலுக்குப் பிறகு பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இருக்காது. அது ஜூன் 4க்குப் பிறகு நடக்கத் தான் போகிறது.
அதுவரை முன்னாள் அமைச்சர்கள் 10 பேரை வைத்து பிரஸ்மீட் வைத்துக் கத்தலாம். யார் எட்டப்பன் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகமே பிரஷரில் இருக்கிறது. தினகரனின் குக்கர் தான் அந்த பிரஷரை வெளியேற்றப் போகிறது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வாசகர் கருத்து