50 சதவீத அ.தி.மு.க., நிர்வாகிகளை இழுக்க ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு
'கொங்கு மண்டலத்தில் தி.மு.க., கூட்டணி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, 50 சதவீத அ.தி.மு.க., நிர்வாகிகளை தி.மு.க., விற்கு அழைத்து வாருங்கள்' என, மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து கொங்கு மண்டல தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என, சர்வேயில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தி.மு.க.,வுக்கு பலவீன மாக இருக்கும் தொகுதிகளில் அதிக ஓட்டு களை பெற்று வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் உள்ள ஒன்றிய, நகர, மாநகர, மாவட்ட நிர்வாகிகள் பதவிகளை வகிக்கும் முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.,வுக்கு கூண்டோடு அழைத்து வாருங்கள் என, நிர்வாகிகளுக்கு முதல்வர் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார். சில நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி தீவிரமாக பணியாற்ற வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் தீவிரமாக பணியாற்றும் நிர்வாகிகள் மீது உள்ள வழக்குகளை நீர்த்து போக வைப்பதற்கும் ஆளுங்கட்சியினர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக, 50 சதவீத எதிர்க்கட்சி நிர்வாகிகளை இழுக்கும் பணிகளில் தி.மு.க., அமைச்சர்கள் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
ஜாதி சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட வைப்பதற்கு பேச்சும் நடத்தியுள்ளனர். நேற்று கோவை தொகுதியில், தேர்தல் பணிகளிலிருந்து விலகி கொள்வதாக பா.ம.க., மாவட்ட செயலர் ராஜ் அறிவித்துள்ளார். அவரது விலகலுக்கு ஆளுங்கட்சியின் அதிகார பலம் தான் காரணம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து