Advertisement

தேர்தல் தேதி அறிவிப்பு முதல் இறுதிக்கட்ட பிரசாரம் வரை: என்ன நடந்தது?

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்துவிட்டது. நாளை மறுநாள் (ஏப்.,19) வாக்குப் பதிவு நடக்க உள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடக்க உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால், அதற்குள் கூட்டணிகளை இறுதி செய்வதிலேயே அரசியல் கட்சிகளுக்கு கால தாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக, 'அ.தி.மு.க., கூட்டணிக்குள் பா.ம.க., வருமா... தே.மு.தி.க., யார் பக்கம், தி.மு.க., கூட்டணியில் 3 சீட் கேட்ட வி.சி.,க்கு மனவருத்தம், வி.சி.,க்கு பானை சின்னம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம், ம.தி.மு.க.,வுக்கு ஒரு சீட் ஒதுக்கினாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்தது,

ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடியது, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதால் சட்டப் போராட்டம் என முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் களமே அதகளப்பட்டது.

முடிவில், தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நடப்பது உறுதியானது.

இதன்பின், மார்ச் 31ல் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட விளவங்கோட்டில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணிகளை முடிவு செய்வதிலேயே நாள்கள் கழிந்துவிட்டதால், கடந்த இரு வாரங்களாக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கின.

தமிழகத்தில் பிரதமர் மோடியின் தொடர் வருகை, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டினர்.

காங்கிரசில் இருந்து அக்கட்சியின் தலைவர் கார்கே, ராகுல்காந்தி ஆகியோரும் இ.கம்யூ., பொதுச்செயலர் டி.ராஜா, மா.கம்யூ., சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர்.

'தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.,வை அ.தி.மு.க., விமர்சிப்பதில்லை' எனத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் குற்றம் சுமத்தவே, ஒருகட்டத்தில், 'பிரதமர் மோடியின் தமிழகம் வருகையால் பலன் இல்லை, தேசியக் கட்சிகளால் மாநிலத்தின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியவில்லை' என பழனிசாமி விமர்சித்தார்.

தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, எய்ம்ஸ் செங்கல்லையும் 29 பைசா அட்டையையும் கையில் வைத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

பா.ஜ.,வோ, இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான அரசியலை முன்னெடுப்பதாக கூறியது. பிரசாரம் முழுவதும் போதை வர்த்தகத்தில் தி.மு.க.,வின் தொடர்புகளையும் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை முன்வைத்துப் பிரசாரம் செய்தது.

இந்நிலையில், இன்று (ஏப்.,17) மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய வேண்டும் என்பதால் சென்னை பெசன்ட் நகரில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோ, சேலத்தில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷுக்கு ஓட்டு சேகரித்தார்.

கோவையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாகனத்தில் ஏறி வீதி வீதியாக ஓட்டு சேகரித்தார். தருமபுரியில் பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து அன்புமணியும், சிதம்பரத்தில் வி.சி., தலைவர் திருமாவளவனும் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை விரைவு ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.

தற்போது வரையில், தமிழகத்தில் ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்துவிட்டதால், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளதால் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்