Advertisement

யாருக்கு ஆட்சி? : பரபரப்பு கருத்து கணிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலின் 'ரியல்' முடிவு நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், அதன், 'ரிகர்சலாக' ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள் நேற்று வெளியாகின. யாருக்கு ஆட்சி கிடைக்கும் என, பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகப் பெரும் தேர்தல் திருவிழாவான லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்., 19ல் துவங்கி நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இதில், மூன்றாவது முறையாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவரும்.

பா.ஜ., ஆட்சி



இந்நிலையில் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளை பல்வேறு ஊடக அமைப்புகள் நேற்று வெளியிட்டுள்ளன. அனைத்து கணிப்புகளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், பா.ஜ.,வின் இலக்கான தனிப்பட்ட முறையில் 370 தொகுதிகள் மற்றும் கூட்டணிக்கு, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி என்பதற்கு சாத்தியமில்லை என்று கணிப்புகள் கூறுகின்றன.

இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி, 295 இடங்களில் வெற்றி பெறும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று காலை நடந்த கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் தெரிவித்தார். அதற்கும் வாய்ப்பு இல்லை என்று, கணிப்புகள் கூறுகின்றன.

மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், ஆட்சி அமைக்க, 272 தொகுதிகளில் வெற்றி என்ற பெரும்பான்மை தேவை. நேற்று வெளியான அனைத்து கணிப்புகளின்படியும், இந்த 'மேஜிக்' எண்ணை, பா.ஜ., கூட்டணி சுலபமாக தாண்டிவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கணிப்புகளின் சராசரியை பார்க்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி, 366 இடங்களையும், இண்டியா கூட்டணி, 144 இடங்களையும் பிடிக்கும். இதில், பா.ஜ., தனிப்பட்ட முறையில், 327 இடங்களையும், காங்கிரஸ், 52 இடங்களையும் பிடிக்கும் என, கூறப்பட்டுள்ளது.தென் மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் கூடுதலாக கிடைக்கும் தொகுதிகள் வாயிலாக, பா.ஜ.,வின் மற்றொரு பிரமாண்ட தேர்தல் வெற்றி உறுதியாகியுள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ., தேர்தலை சந்திக்கும் ஆந்திராவில், மொத்தமுள்ள 25ல், 18ஐ கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவு



கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், கடந்த தேர்தலைப் போலவே, பா.ஜ., அனைத்து தொகுதிகளையும் அள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல தெலுங்கானாவில் சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி வலுவாக இருந்தாலும், மொத்தமுள்ள, 17 தொகுதிகளில், பாதிக்கு மேல் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என, கூறப்படுகிறது.

தமிழகத்தில் தாமரை மலரும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. புதுச்சேரியையும் சேர்த்து, மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 1 முதல் 5 இடங்களில் பா.ஜ., வெல்ல வாய்ப்புள்ளதாக பல கணிப்புகள் கூறுகின்றன.

சிம்மசொப்பனமாக விளங்கும் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு, பா.ஜ., அதிர்ச்சி அளிக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன.

இங்கு மொத்தமுள்ள, 42 இடங்களில், பா.ஜ., 18 முதல் 22 இடங்களை கைப்பற்றலாம் என, கூறப்படுகிறது. மம்தா கட்சிக்கு, அதிகபட்சம், 19 இடங்களே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.குஜராத், ம.பி., உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல், டில்லியில், பா.ஜ., பெரிய அளவில் தொகுதிகளை அள்ளும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கடந்த தேர்தலில், 40 இடங்களில், 39ல் வெற்றி கொடுத்த பீஹாரில், சற்று பின்னடைவு ஏற்படும். ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஏழு இடங்களில் வெல்லும் என, கணிப்புகள் தெரிவிக்கின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்