ரயிலில் முதியோர் கட்டண சலுகை: பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இல்லை
ரயிலில் முதியோருக்கு கட்டண சலுகை குறித்து, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இல்லாதது, முதியோரிடம் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல், ரயில் பயணத்தின்போது, 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பின் போது, 2020ல் முதல் இந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பிறகும், இந்த கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து, சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பின் நிர்வாகிகளும், மூத்த பயணியர்களான ராமாராவ், சுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:
முதியோருக்கான ரயில் கட்டண சலுகை ஆன்மிக தலங்களுக்கு செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் வசதியாக இருந்தது. நடுத்தர மக்கள் தான் அதிகளவில் இருப்பர். இந்த சலுகை பயனுள்ளதாக இருந்தது.
இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு ரயில்வே அமைச்சகம் செவிசாய்க்கவில்லை. கொரோனா காலத்தில் ரத்து செய்தபோது, பெரிய அதிருப்தி இல்லை. ஆனால், மற்ற சலுகைகளை மீண்டும் கொண்டு வந்தபோது, இந்த சலுகை தரப்படாதது கவலையாக இருக்கிறது. இந்த சலுகையை மீண்டும் கொண்டு வருவதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. ஆனால், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதது ஏன் என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
.
'12 கோடி பேருக்கு பாதிப்பு'ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஆறு கோடி பேரும், முன்பதிவில்லாத பெட்டிகளில் ஆறு கோடி பேரும் இந்த சலுகையை பெற்று வந்தனர். கொரோனா பாதிப்புக்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்த சலுகை தற்போது வரை வழங்கப்பட வில்லை. இதற்காக, 1,667 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாக ரயில்வே வாரியம் கூறுகிறது. 12 கோடி மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை கட்டணம் கொடுக்கக் கூடாதா. நாடு முழுதும் உள்ள 12 கோடி முதியோரின் நலனை கருத்தில் கொண்டு, இந்த கட்டண சலுகையை பெரிய சுமையாக கருதாமல், மீண்டும் வழங்க வேண்டும்- இளங்கோவன், தலைவர், தட்சிண ரயில்வே பென்ஷனர் சங்கம்.
வாசகர் கருத்து