'அ.தி.மு.க.,வை திட்ட முடியாத சூழலில் இருக்கிறோம்' பிரசார களத்தில் பா.ஜ., எதிர்ப்புக்கு ஸ்டாலின் உத்தரவு

தேர்தலை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தினமும் அறிவாலயத்தில், கட்சியின் மூத்த தலைவர்களோட ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமரின் கன்னியாகுமரி கூட்டம் முடிந்த பின் நடந்த ஆலோசனையில், அ.தி.மு.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி அவ்வட்டாரங்களில் மேலும் கூறியதாவது:

பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க.,வை தினமும் குறிவைத்து விமர்சிப்பது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தான். இது துவங்கிய போது, தி.மு.க., எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜ., சின்ன கட்சி தானே, அவர்களுக்கு பதில் சொல்லி அவர்களுடைய முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். அதேநேரம் அ.தி.மு.க., அமுக்கமாக இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இருப்பினும், அண்ணாமலை தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார். ஒரு கட்டத்தில், மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என மத்திய பா.ஜ., தலைவர்களும் இதில் சேர்ந்து கொண்டனர். ஆளுநர் ரவி வேறு, ஒருபக்கம் குடைச்சல் கொடுக்க. பா.ஜ.,வுக்கு பதில் சொல்லி முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு தி.மு.க., தள்ளப்பட்டது.

பா.ஜ.,வும் தி.மு.க.,வை வில்லத்தனமாக சித்தரிப்பதை தமிழகத்தோடு நிறுத்தி கொள்ளாமல், தேசிய அளவில் பிரசாரம் செய்து வருகிறது. அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் பற்றி பேசியதை இன்று வரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் நடந்தபோது அதை பிரசார பொருளாக மாற்றிவிட்டது.

இதனால், இண்டியா கூட்டணியில் தி.மு.க.,விற்கு அவப்பெயர் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், தயாநிதி உள்ளிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள் வடமாநிலத்தவரை பற்றி பேசியதெல்லாம் கூட ஆங்கில சேனல்களில் வரும்படி செய்து, தி.மு.க.,வை தன் ஹிந்துத்துவ பிராந்திய அரசியல் லாபத்திற்காக பா.ஜ., பயன்படுத்தி வருகிறது.

அது ஒரு பக்கம் இருக்க, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், அ.தி.மு.க.,வை பொருட்படுத்தாமல், தி.மு.க.,வை மட்டும் விமர்சனம் செய்து வருகிறார். அ.தி.மு.க., கூட்டணியை முறித்துக் கொண்டதால் அந்த கட்சியையும் விமர்சனம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஜெயலலிதா எம்.ஜி.ஆரை பாராட்டி பேசி அ.தி.மு.க., ஓட்டுக்களை பிரிக்க பார்க்கிறார்.

சமீபகாலம் வரை அண்ணாமலையை மட்டும் குறிவைத்து வந்த அ.தி.மு.க., பின், பா.ஜ.,வின் உத்தி தெரிந்ததும், எங்களை விமர்சிப்பதை விட்டு பா.ஜ.,வை குறிவைக்க துவங்கி இருக்கிறது.

கூடவே கருத்து கணிப்புகளும் பா.ஜ.,வின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாக சொல்வதால், பா.ஜ., தான் முக்கிய எதிரி என்று தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் முடிவு செய்து விட்டனர். மேலும் அ.தி.மு.க., மிகவும் பலவீனமாக இருப்பதாக அவர்கள் கணிக்கின்றனர். அதனால், அ.தி.மு.க.,வை திட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பிரசார உத்தி பேசப்பட்டதாகவும், அப்போது, 'அ.தி.மு.க.,வை திட்ட முடியாத சூழலில் இருக்கிறோம்' என்று முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., மூத்தத் தலைவர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.

கூடவே, வரும் லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.,வை மையப்படுத்தியே எதிர் பிரசாரம் அமைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக கட்சியின் அனைத்து மட்டங்களிலும் இருக்கும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை தயார்படுத்த கட்சியின் மூத்த தலைவர்களை கேட்டுக் கொண்ட விபரங்கள் வெளியாகி உள்ளன.

இனி தமிழக மேடைகளில் தி.மு.க.,வினர், பா.ஜ.,வை மட்டுமே முழுவேகத்தில் எதிர்த்து முழங்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்