நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி ரூபாய் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி சென்ற நெல்லை விரைவு ரயிலில் பணம் கடத்திச் செல்லப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் இருந்து ரூ.4 கோடியை போலீசார் கண்டுபிடித்தனர். அத்துடன் சதீஷ், பெருமாள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.
இது குறித்து, நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "ரயிலில் பிடிபட்ட பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை சதிவலையில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்" என்றார்.
இதற்கிடையில், சதீஷ், பெருமாள் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினர்.
தொடர்ந்து, கொரியன் ரெஸ்டாரன்ட் நடத்தி வரும் பா.ஜ.,வை சேர்ந்த தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனன் என்பவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அந்தப் பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் நயினாரின் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பா.ஜ., உறுப்பினர் அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு நபர்களிடம் சிறிது சிறிதாக பணத்தைப் பெற்று அதை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 பேர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் பணம் சிக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சுயேட்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம், பணம் பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து