Advertisement

ரஜினிக்கு துாண்டில் வீசும் பா.ஜ., விஜய்க்கு துாது போகும் கமல்

நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்களும், ம.நீ.ம., தலைவர் கமல் வாயிலாக, நடிகர் விஜய் ஆதரவை பெறும் நடவடிக்கையில், தி.மு.க.,வும் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன், ரஜினி நல்ல நட்பில் உள்ளார். சிறப்பு அழைப்பின் பேரில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ரஜினியும் பங்கேற்றார். தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. இதனால், பா.ஜ., மீது கடுமையான ஈர்ப்பில் ரஜினி உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வரும் லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.,வுக்கு ஆதரவாக ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ., தலைவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினிக்கு துாது



கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சி குறித்து பாசிட்டிவ் எண்ணத்தில் இருக்கும் ரஜினி, இதுவரை எதற்காகவும் மத்திய அரசை விமர்சித்ததில்லை. அதனால், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்க, ரஜினி நிச்சயம் ஆதரவு கொடுப்பார் என்று உறுதியாக நம்பியே, அவருடைய ஆதரவை பெற பா.ஜ., தரப்பு முயல்கிறது.

'பா.ஜ.,வுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்து வாய்ஸ் கொடுக்க ரஜினி தயங்கினால், அதற்காக பா.ஜ., தரப்பினர் மல்லுக்கட்டாமல், பிரதமர் மோடியின் பத்தாண்டு கால சாதனைகளை பாராட்டி சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டால் போதும்' என்றும் பா.ஜ., தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.

இந்த தகவல் தமிழக உளவுத்துறை வாயிலாக, தி.மு.க., தரப்புக்குப் போனது. ஒருவேளை அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற கோணத்தில் தி.மு.க., தரப்பு சிந்தித்தது. அதற்கு பதிலடியாக நடிகர் விஜய் ஆதரவை தி.மு.க., பெறலாம் என அக்கட்சித் தரப்பில் யோசிக்கின்றனர்.

தற்போது விஜய்க்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது. குறிப்பாக அவர்கள் அனைவரும் இளைஞர்கள். விஜய்யும், கமலும் நெருக்கமாக உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ள விஜய், லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்ட நிலையில், விஜயும் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது தி.மு.க., தரப்பு நம்புகிறது.

கமல் செய்வாரா?



இதற்காக நடிகர் கமலை, விஜயை சந்திக்க வைக்கும் முயற்சிகள் துவங்கி உள்ளன. இருவரும் சந்தித்துப் பேசி, அதன் வாயிலாக புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளத்தில் வைரலாக்கினால் கூட போதும் என்று தி.மு.க., தரப்பு நினைக்கிறது.

பிரதமர் மோடியின் தொடர் தமிழக வருகையால், பா.ஜ.,வுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ரஜினியும் பா.ஜ.,வுக்கு 'வாய்ஸ்' கொடுத்தால் தங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்று தி.மு.க., கருதுகிறது. இதனால், கமல் வாயிலாக விஜய் ஆதரவை பெறும் முயற்சியில், தி.மு.க., தீவிரமாக களம் இறங்கி உள்ளது என கட்சி வட்டாரங்கள் கூறின.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்