நீங்களாக போனால் மரியாதை... பெருசுகளை கைகழுவும் பா.ஜ.,
லோக்சபா தேர்தலுக்கான, 195 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ., மேலிடம், இம்மாதம், 3ம் தேதி வெளியிட்டது.
இதில், பல 'சிட்டிங்' எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, இந்தப் பட்டியலில் இல்லாத, தற்போது எம்.பி.,க்களாக உள்ளவர்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்குமா என்ற, கேள்வியும் எழுந்து உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான முதல் பட்டியலில் இடம் பெறாத பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி.,க்களுக்கு, மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஒன்று, வி.ஆர்.எஸ்., எனப்படும், விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவிக்கலாம்; இது, மரியாதையாக இருக்கும். இல்லாத நிலையில், கட்டாய ஓய்வு பெற நிர்ப்பந்தம் அல்லது வாய்ப்பு மறுப்பை கையாள திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர், இவ்வாறு, வி.ஆர்.எஸ்., பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.
இவ்வாறு வி.ஆர்.எஸ்., பெறாதவர்கள், கட்டாய ஓய்வு திட்டத்தின் கீழ், ஓய்வுபெற கட்டாயப்படுத்தப்படுவர். அதையும் புறக்கணித்தால், மறுவாய்ப்பு தரப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்படுவர்.
இது, வயதில் மூத்தவர்கள் மற்றும் சரியாக செயல்படாத எம்.பி.,க்களுக்கே பொருந்தும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, இந்த மூன்றில், ஏதாவது ஒரு வாய்ப்பில் சிக்கும் வாய்ப்புள்ள சில எம்.பி.,க்கள், தங்களது மகன் அல்லது மகளுக்கு 'சீட்' தரும்படி கட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கர்நாடகாவில் இவ்வாறு, பல வயதில் மூத்த எம்.பி.,க்கள், தங்களின் ஓய்வை அறிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள, 28 தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு தற்போது, 25 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், ஆறு பேர், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதிலும் சிலர், சூப்பர் சீனியர்களாக உள்ளனர்.
சிக்கபல்லாபூர் எம்.பி., யான பி.என்.பச்சேகவுடா, 81 வயதாவதால் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். சாம்ராஜ் நகர் எம்.பி.,யான ஸ்ரீனிவாச பிரசாத், 76, வி.ஆர்.எஸ்., அறிவித்துள்ளார். மற்றவர்கள் வரும் நாட்களில், வி.ஆர்.எஸ்., அறிவிப்பை வெளியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து