வாரிசா? இல்லையா? விளவங்கோடு குழப்பம்
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக கிறிஸ்துவ மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டார்.
கத்தோலிக்க கிறிஸ்துவரான தாரகை கத்பர்ட்டுக்கு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் சிபாரிசு செய்துள்ளார். மேலும், காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த லுார்தம்மாள் சைமனின் கொள்ளு பேத்தி என்றும் டில்லி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் தாரகை கத்பர்ட்டுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தாரகை கத்பர்ட் சிறந்த பேச்சாளர் என்பதால், அவருக்கு மீனவர் சமுதாயத்தினர் மத்தியில் வரவேற்பு உள்ளது.
லுார்தம்மாள் சைமன் காலத்திற்கு பின், மீனவர் சமுதாயத்திற்கு காங்கிரசில் வாய்ப்பு தரப்படவில்லை. அந்த குறையை போக்கும் வகையில், நீண்ட ஆண்டுகளுக்கு பின், மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
அதே சமயம், தாரகை, லுார்தம்மாள் சைமனின் கொள்ளு பேத்தி அல்ல என, லுார்தம்மாள் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
லுார்தம்மாள் சைமனின் பேரன் அலெக்சாண்டர் மேனுவல் சைமன் கூறியுள்ளதாவது:
குளச்சலில் என் பாட்டி லுார்தம்மாளின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றேன். தாரகை என் பாட்டியின் பேத்தி கிடையாது. அவர் பேத்தி என சொல்வது முழுக்க முழுக்க பொய். மீனவர் சமுதாயத்தினர் அனைவருக்கும் தெரிய வேண்டும். பொய்யான தகவலை ஆதரிக்க வேண்டாம்.
இது அனைவருக்கும் போய் சேர வேண்டியது அவசியம். விளவங்கோடு தொகுதியில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் போட்டியிடுவது சந்தோஷம் தான். ஆனால், பொய்யான உறவை கொண்டாடி, அரசியலில் முன்னுக்கு வருவதை, நானும், என் குடும்பத்தினரும் மிகவும் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து