அதிதி சிங்: பிரியங்கா மீது பா.ஜ., ஏவும் அம்பு
உ.பி.,யின் ரேபரேலி தொகுதி, முதல் லோக்சபா தேர்தலில் இருந்தே காங்கிரசின் கோட்டை. முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி, 1952 மற்றும் 1957 பொதுத் தேர்தல்களில் வென்ற தொகுதி. தொடர்ந்து, 1967, 1971, 1980ல் இந்திரா இங்கு வென்றார். நெருக்கடி நிலைக்குப் பின், 1977ல் ஜனதா கட்சியின் ராஜ் நாராயணிடம் அவர் தோல்வியைத் தழுவியதும் இங்கேதான். அடுத்து, 1980, 1984 தேர்தல்களில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த அருண் இங்கு வென்றார். முன்னாள் காங்., தலைவர் சோனியா, 2004, 2009, 2014, 2019 தேர்தல்களில் இங்கு வென்றார்.
இப்போது சோனியா களத்தில் இருந்து விலகி, ராஜ்யசபாவிற்கு சென்று விட்ட நிலையில், சோனியாவின் மகளான பிரியங்காவை ரேபரேலியில் நிறுத்த, காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. காங்கிரஸ் குடும்பத்தின் இன்னொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் நிற்பார் என்று காங்கிரசார் கூறுகின்றனர். அமேதியும் ரேபரேலியும் அடுத்தடுத்துள்ள தொகுதிகள். உ.பி.,யில் பா.ஜ., வலுவாக உள்ளதால், இந்த வியூகம்.
காங்கிரஸ் கைகளில் இருந்து, அமேதி, ரேபரேலியை பறிப்பதில் பா.ஜ., எப்போதுமே முனைப்பாக இருந்திருக்கிறது. 2019 தேர்தலில் அமேதியில் பா.ஜ., வேட்பாளர் ஸ்மிருதி இரானி, ராகுலை வீழ்த்தினார். அப்போது, மாநிலம் முழுதும் பா.ஜ., அலை. ஆனால், ரேபரேலி மட்டும் காங்கிரசை தாங்கிப் பிடித்தது. சோனியா வென்றார்.
இந்த முறை, ஐந்தாம் கட்ட தேர்தல் பட்டியலில் வரும் அமேதி, ரேபரேலியில் மே 20 அன்று தான் ஓட்டுப்பதிவு. வியூக நிமித்தமாக, காங்கிரஸ், இந்த தொகுதிக்கான வேட்பாளர்களை இன்னமும் அறிவிக்கவில்லை. ராகுலை வென்ற ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமேதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது பா.ஜ.,. அவரும், அமேதியிலேயே வீடு வாங்கி, பால் காய்ச்சி விட்டார். கடந்த ஆறு மாதங்களாகவே கிராமம் கிராமமாக பிரசாரத்தையும் துவங்கி விட்டார்.
என் அண்ணன்
அதே சமயம், ரேபரேலிக்கான அறிவிப்பை பா.ஜ., தள்ளி வைத்திருக்கிறது. காங்கிரஸ் அறிவிப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ., தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேட்பாளர் உறுதியாகி விட்டதாகத் தெரிகிறது. ரேபரேலி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அதிதி சிங் தான் அந்த வேட்பாளர்.
பிரியங்காவால் தேசிய அளவில் கவனம் பெற்றவர் இவர் என்பதுதான் நகைமுரண். இவருடைய பின்புலம் சுவாரசியமானது. ரேபரேலியில் காங்கிரசில் ஒரு ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் அதிதியின் தந்தை அகிலேஷ் சிங். ஐந்து முறை ரேபரேலி சட்டசபை தொகுதியை வென்றவர். மாநிலத்தில் செல்வாக்கு மிக்க, தாக்குர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
டில்லியிலும், முசவுரியிலும் படித்தவரான அதிதி, அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைக் கல்வி பட்டம் பெற்றவர். பெருநிறுவன வேலையிலிருந்து விலகி, இளைஞர் காங்கிரசில் இணைந்த அதிதியை, அடையாளம் கண்டு, கட்சிக்குள் வேகமாக ஊக்குவித்தார் பிரியங்கா. 2017ல் தன் 30வது வயதில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று வென்று எம்.எல்.ஏ., ஆனார் அதிதி.
அதிதியின் வளர்ச்சி பலரை அசரடித்தது. பிரியங்கா தன் சகோதரனுக்கு அதிதியை மணம் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்றுகூட பேசப்பட்டது. அதிதியை, ராகுல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக உ.பி.,யில் செய்திகள் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில் தான், அதை கடுமையாக மறுத்து அதிதி பேசினார். 'ராகுல் என் அண்ணன்' என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
முதல் வெற்றி
விரைவில் அதிதிக்கு திருமணம் ஆனது. பஞ்சாபைச் சேர்ந்த அரசியல் குடும்ப வாரிசும், இளம் எம்.எல்.ஏ.,வுமான அங்கத் சிங்கை அதிதி மணந்தார். அடுத்த ஆண்டில், அகில இந்திய மகிளா காங்கிரசின் பொதுச்செயலராகவும் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், சட்டசபையில் பா.ஜ.,வோடு நெருக்கம் காட்டுகிறார் என்ற புகார் அதிதி மீது உருவானது. காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.,வின் நிலைப்பாட்டை ஆதரித்து அவர் பேசியபோது காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். கையோடு பா.ஜ.,வில் இணைந்தார் அதிதி. 2022ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அவர், மீண்டும் வென்று எம்.எல்.ஏ., ஆனார். இந்த தொகுதியில் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பதால், அதிதிக்கு விசேஷ கவனிப்பு கொடுத்து வருகிறது பா.ஜ.,
இப்போது பிரியங்காவுக்கு எதிராக, அதிதியைத்தான் இறக்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.,. தொகுதியில் நன்கு அறியப்பட்டவர், பிரியங்கா போன்றே நவீன தோற்றம் கொண்டவர், ஆங்கில டிவி சேனல்களை அனாயசமாக அணுகக் கூடியவர் என்பதால் நல்ல போட்டியை அதிதி தருவார் என்பது பா.ஜ.,வின் கணக்கு!
-ஜனவாகன்
கட்டுரையாளர், சுயாதீன பத்திரிகையாளர்
வாசகர் கருத்து