அழிவில் கரூர் ஜவுளித்துறை பா.ஜ., பிரசாரத்துக்கு வரவேற்பு
கரூர் மாவட்டத்தில் உள் மற்றும் வெளிநாடுகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்யும், 800 நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலம், 8,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. இத்தொழில் வளர்ச்சிக்கு, சாயப்பட்டறைகள் முக்கிய துாண்களாக விளங்கின.
இங்கு, 250க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தன. அவற்றில், ஒரு லட்சம் பேர் நேரடியாக, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' இல்லாத சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன. தற்போது விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, சாயப்பட்டறைகள் உள்ளன. இதனால், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், சேலம், பவானி, பள்ளிபாளையம், ஈரோடு ஆகிய இடங்களில், நுால்களை சாயமிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சாயபிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர், லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, காங்., - எம்.பி., ஜோதிமணி ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை.
கைவிடப்பட்ட சாயபூங்கா
இதுகுறித்து, ஜவுளி துறையினர் கூறியதாவது:
வெளிமாவட்டங்களில் சாயமிட, கிலோவுக்கு 250 முதல் 350 ரூபாய் வரை செலவாகிறது. போக்குவரத்து செலவு தனி. மேலும் தரமான முறையில், நுால் சாயமிடுவதில் மற்றும் குறித்த நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
கடந்த, 2013ல் அரசின் மானியத்துடன், 360 கோடி ரூபாய் செலவில் சாயப்பூங்கா அமைக்க, புன்னம் கிராமத்தில், 110 ஏக்கர் நிலத்தில் சாய, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2014ல் லோக்சபா தேர்தல் நெருங்கியபோது, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, சாயபூங்கா அமைக்கப்படாது என அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 2014ல், 110 விதியின் கீழ் சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 700 கோடி ரூபாய் செலவில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரப்படும் என்று அறிவித்தார்.
பா.ஜ.,வுக்கு வரவேற்பு
அப்போதைய அ.தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி, பின், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தம்பிதுரை ஆகியோர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. கரூர் காங்.,- எம்.பி.,ஜோதிமணிக்கு, ஜவுளிதுறையில் என்ன பிரச்னை உள்ளது என்பது கூட தெரியுமா என, தெரியவில்லை.
உலக பொருளாதார மந்தநிலை, சாயப்பட்டறை அகற்றம் போன்ற காரணங்களால் தொழிலை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பிரச்னை பற்றி மத்திய, மாநில அரசுகளிடம் கரூர் மாவட்ட அரசியல்வாதிகள் எடுத்துரைக்காததால், ஜவுளித்துறை அழிவை நோக்கி செல்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனால், இந்த பிரச்னைகளை நன்கு அறிந்த கரூர் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன், ஜவுளி உற்பத்தியாளர்களிடமும், தான் பிரசாரத்துக்கு செல்லுமிடங்களிலும், 'அடுத்து மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், ஜவுளி பிரச்னைகள் குறித்து பார்லிமென்ட் வரை எடுத்து சென்று, தீர்த்து வைப்பேன். எனக்கு ஆதரவு தாருங்கள்' என, பிரசாரம் செய்கிறார்.
இது ஜவுளித்துறையினர் மத்தியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்து. கரூர் மக்கள் மத்தியிலும் அவரது பேச்சு நம்பிக்கையை ஏற்படுத்திள்ளது என, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து